Gold Rate: `இரண்டே நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 குறைவு!' இப்போது தங்கம் வாங்கலாமா?
தொடர்ந்து உச்சங்களை தொட்டு வந்த தங்கம் விலை, கடந்த இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது.
இதற்கு காரணம் என்ன, இந்த நிலை தொடருமா என்பதை விளக்குகிறார் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர்.
"தங்கத்தை பொறுத்த வரை, தங்கம் விலை குறைகிறது என்றாலும் சந்தோஷத்தில் மக்கள் அதை வாங்குவார்கள். ஏறுகிறது என்றாலும் பயத்தில் வாங்கி வைத்துக்கொள்வார்கள்.
தங்கம் விலை ஏறுகிறது என்பதால் 'புரோஃபிட் புக்கிங்' அடிப்படையில், தற்போது பலர் அதை விற்று வருகின்றனர்.
இது காரணமாகத் தான் தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.

இந்த நிலை தொடருமா?
ஆனால், இப்படியே தங்கம் விலை குறையும் என்று சொல்ல முடியாது. சர்வதேசப் போர்கள், மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்தல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி முடிவுகள் காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
இப்போதைய சூழலில், தங்கம் விலை கொஞ்சம் கொஞ்சமாக கிராமுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000-த்தை தொடாமல் இறக்கத்திற்கு வராது.
ஆனால், இதையும் அடித்துக் கூற முடியாது. சந்தை என்பது எதிர்காலத்தை பொறுத்தது தான். எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை யூகித்து சந்தை செயல்படும். ஆனால், எதிர்காலம் நாம் யூகித்த மாதிரியே தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.
அதனால், எப்போது வேண்டுமானாலும் எந்த மாற்றமும் நிகழலாம்.
இப்போது தங்கத்தை வாங்கலாமா?
விலை ஏறுமுகத்தில் இருக்கும் போது, தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.
திருமணம், விசேஷம் போன்ற காரணங்களுக்காக கட்டாயம் தங்கம் வாங்குபவர்கள் என்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம்.

கவனிக்க வேண்டியது என்ன?
2011-ம் ஆண்டு தங்கம் உள்ளிட்ட உலோகங்களின் விலை உச்சத்தை தொட்டது. அதன் பிறகு, 2020-ம் ஆண்டு வரை மெல்ல மெல்ல தான் உயர்ந்தது.
2020-ம் ஆண்டு கொரோனா பேரிடரை தொட்டு மீண்டும் தங்கம் விலை ஏற்றத்தில் வேகத்தை காட்டியது. அது இப்போது வரை தொடர்கிறது.
இதனால், தங்கம் விலை எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ, அதே வேகத்தில் இறங்கலாம் அல்லது ஒரே விலை அளவில் தொடரலாம் என்பதை கவனத்தில் வைத்துகொள்ள வேண்டும்.
அப்படி பார்க்கையில், தங்கம் மட்டுமல்ல, எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் அதன் கடந்த 10 ஆண்டுக்கால வரலாற்றை கவனத்தில் வைத்துகொள்வது நல்லது" என்று கூறினார்.