போா்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் அரசுமுறை பயணம்!
``மக்களுக்காக மேடையேறும் கலைஞர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்'' - நெகிழ வைத்த திணை நிலவாசிகள்
கலைஞர்களுக்கான உரிய மரியாதையை செலுத்துவது அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். இதன் பிறகும் கலையை நமக்கு மரியாதை செய்வோர் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கும்.
இப்படியான ஒரு விஷயத்தை நிகழ்த்தியிருக்கிறது திணை நிலவாசிகள் அமைப்பு. காட்லா கலைத்திருவிழாவை நடத்தி மூத்த கலைஞர்கள் பலருக்கும் மரியாதை செலுத்தி அவர்களை திணை நிலவாசிகள் நெகிழச் செய்திருக்கிறார்கள்.

இது குறித்து திணை நிலவாசிகள் அமைப்பில் இருக்கும் பாகுதீனுடன் பேசுகையில், ``இந்த காட்லா கலைத்திருவிழாவை மூத்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்தான் நடத்தியிருக்கோம்.
அதுமட்டுமல்ல, மூத்த கலைஞர்களை மரியாதை செய்யும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் நாங்கள் விரும்பினோம். முக்கியமாக, இந்த கலை திருவிழாவில் ஒப்பாரி பாடல்களை பாடும் ஒரு அம்மாவுக்கு மரியாதை செலுத்தியிருந்தோம்.
அவரர் தற்போது உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவரின் வீட்டிற்கே அவரைத் தேடிச் சென்று அவருக்கு ஊக்கத்தொகையை கொடுத்து மரியாதை செய்தோம். அவரின் வீட்டிற்கு நவீன கலைஞர்களையும் அழைத்துச் சென்று `உங்களுக்குப் பிறகு இந்தக் கலையைக் கொண்டுச் செல்வதற்கு இவர்கள் இருக்கிறார்கள்' எனக் கூறி நம்பிக்கை தெரிவித்தோம்.
அவர்களிடமும் நாங்கள் ஒரு நம்பிக்கையைப் பெற்றிருந்தோம். இதுபோல, பறையிசை கலைஞர்கள், தெருகூத்துக் கலைஞர்கள், தெருகூத்து ஆசிரியர்கள் என பலரை தேர்ந்தெடுத்து நாங்கள் மரியாதை செலுத்தினோம்.
இதை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கிராமத்தில் நிகழ்த்துவோம். சென்னை மட்டுமன்றி வெவ்வேறு பகுதியில் நடத்த திட்டமிட்டு திருவண்ணமலை மாவட்டம் வில்வாரணி கிராமத்தில் நடத்தியிருந்தோம்.

அந்த ஊர் மக்களிடம் ஒத்துழைப்போடும் உதவியோடும்தான் இந்த விழாவை நடத்தி முடித்திருக்கிறோம். எங்களுடைய குழுவின் பெயர் திணை நில வாசிகள்.
நானும் 15 வருடமாக கலைத்துறையில்தான் இருக்கிறேன். மக்களுக்காக மேடையேறும் கலைஞர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. அதன் வெளிப்பாடுதான் இது.
அவர்களுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும்போது ஒரு திருப்தி கிடைக்கும். நிகழ்வுக்கு அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், தெருக்கூத்து கலைஞர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
நகரங்களை தாண்டி கிராமங்கள்ல தொன்மை சார்ந்த கலைஞர்களைக் விரும்புபவர்கள் இன்னும் இருக்கிறார்கள்." எனக் கூறி முடித்துக் கொண்டார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
