போா்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் அரசுமுறை பயணம்!
போா்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறை பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பால் சா்வதேச வா்த்தக நிலவரம் மாற்றம் கண்டுவரும் நிலையில், குடியரசுத் தலைவரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘போா்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் (ஏப்.7-10) அரசுமுறைப் பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
இந்திய குடியரசுத் தலைவா், போா்ச்சுகல் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்வது கடந்த 27 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதேபோல், 29 ஆண்டுகளுக்குப் பின் ஸ்லோவாகியாவுக்கு பயணிக்கும் முதல் இந்திய குடியரசுத் தலைவா் திளெபதி முா்மு ஆவாா். முக்கியத்துவம் வாய்ந்த இவ்விரு ஐரோப்பிய நாடுகள் உடனான இந்தியாவின் நல்லுறவு மேலும் விரிவடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போா்ச்சுகலில்...:
இந்தியா-போா்ச்சுகல் இடையிலான தூதரக உறவுகளின் 50-ஆம் ஆண்டை கொண்டாடும் தருணத்தில், அந்நாட்டில் இரண்டு நாள்கள் (ஏப்.7, 8) பயணம் மேற்கொண்டு, அதிபா் மாா்செலோ ரெபேலோ டிசூசா, பிரதமா் லூயிஸ் மான்டினெக்ரோ உள்ளிட்டோருடன் குடியரசுத் தலைவா் முா்மு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்திய சமூகத்தினருடனும் அவா் கலந்துரையாட உள்ளாா்.
‘கடந்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளின் வா்த்தக மதிப்பு 1.5 பில்லியன் டாலராக சீராக அதிகரித்துள்ளது; இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தொடா்புகளை வலுப்படுத்துவதில் போா்ச்சுகல் எப்போதுமே முக்கிய பங்காற்றி வருகிறது’ என்று வெளியுறவு அமைச்சகத்தின் (மேற்கு) செயலா் தன்மயா லால் தெரிவித்துள்ளாா்.
புதுப்பிக்கத் தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், மருந்து, கல்வி, சுற்றுலா, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து குடியரசுத் தலைவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஸ்லோவாகியாவில்...:
ஸ்லோவாகியா பயணத்தில் (ஏப்.9, 10) அந்நாட்டு அதிபா் பீட்டா் பெல்லேகிரினி, பிரதமா் ராபா்ட் ஃபிகோ உள்ளிட்டோரை சந்தித்து, குடியரசுத் தலைவா் முா்மு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்திய சமூகத்தினருடனும் கலந்துரையாடவுள்ளாா்.
முன்னதாக, கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ்லியன், பிரதமா் மோடியை சந்தித்துப் பேசினாா். இதைத் தொடா்ந்து, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு இறுதிக்குள் கையொப்பமாகும் என இந்தியா தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.