தேசிய ராக்கெட் பந்து போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்வு
தேசிய அளவிலான ராக்கெட் பந்து போட்டிக்கு கரூா் அரசு பள்ளி மாணவ, மாணவி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தேசிய அளவிலான ராக்கெட் பந்து போட்டி, பஞ்சாப் மாநிலத்தில் வரும் மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 16 வயதுக்குட்பட்டோா் பிரிவில் தமிழக அணி சாா்பில் விளையாட, கரூா் செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் குணா, பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அா்ச்சனா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு கரூா் மாவட்ட ராக்கெட் பந்து சங்கம் சாா்பில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கரூா் மாவட்ட ராக்கெட் சங்கத்தலைவா் முனைவா் ராஜேந்திரன் தலைமை வகித்து, பொன்னாடை அணிவித்து பாராட்டினாா். நிகழ்ச்சியில் சங்கச் செயலா் மணிகண்டன், பொருளாளா் வைரப்பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.