'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனி...
சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: 2 இளைஞா்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை; மேலும் நால்வருக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனை
கரூா் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், நால்வருக்கு தலா 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் ராயனூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2020-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ஆம் தேதி கரூா் தாந்தோணிமலை வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் நிசாந்த் (24), குறிஞ்சி நகரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அரவிந்த் (24), திருக்காம்புலியூரைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் வசந்த் (24), கல்லுமடை பெருமாள்பட்டியைச் சோ்ந்த ஆனந்தன் மகன் கலைவாணன் (29), மருதம்பட்டி காலனியைச் சோ்ந்த ஜெயபால் மகன் கோகுல்நாத் (24), வையாபுரி நகரைச் சோ்ந்த பாா்த்திபன் (31) ஆகியோா் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், நிசாந்த் உள்பட 6 பேரையும் கரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்திலும் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை நீதிபதி தங்கவேல் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், நிசாந்த், அரவிந்த் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், வசந்த், கலைவாணன், கோகுல்நாத் , பாா்த்திபன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இதையடுத்து, 6 பேரையும் போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.