வீடு கட்டுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா.. அதென்ன உச்சம், நீச்சம்?
ஒருவருக்கு வீடு என்பது சொர்க்கமாக இருக்க வேண்டும். வீட்டில் நுழையும் பொழுது நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு வீடாக அமைய வேண்டும். சிறு வீடாக இருந்தாலும் வாஸ்து முறைகள் ஒரு சிலவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொதுவாக வீடு எந்த திசை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் வீட்டின் திசைக்கு ஏற்ப உச்ச வாசலாகவும் மற்றும் வீட்டின் உள் அறைகளின் அமைப்பு சரியான திசையில் இருப்பது நல்லது. வீட்டின் நுழைவாயில் சரியாக அமைந்தால் நோயற்ற வாழ்க்கையும், வீட்டில் மகாலட்சுமியும் நிரந்தரமாக சம்மணம் போட்டு அமர்ந்திருப்பாள். ஒரு சில வழிமுறைகளை வீடு கட்டும் முன்பு பின்பற்றியே ஆக வேண்டும்.
வீட்டின் மனை அமைப்பு செவ்வகமாகவோ, சதுரமாகவோ அமைய வேண்டும். அதற்கேற்ப ஒரு மனையில் வீடு கட்டும் முன்பு, மற்ற திசைகளை விட வடக்கிலும் கிழக்கிலும் அதிக காலி இடங்களை விட்டு வீடு கட்ட வேண்டும். அதற்கு முதலில் வீட்டின் வரைபட பிளானை சரியாக வரைந்துகொள்ள வேண்டும். அவற்றின் எட்டு மூலைகளிலும், திசைகளைக் குறிப்பிட்டு, அதில் முக்கிய மூலைகளான ஈசானியம், அக்னி, வாயு, நிருதி மூலைகளின் திசைகளை எழுதிக்கொள்ள வேண்டும். இவற்றில் எந்த திசையில் அதிக பளு வைக்கும் இடம், எங்கு நீரோட்டம் மற்றும் பளு குறைவாக வைக்கும் திசை என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு மனையின் வாஸ்து பகவான் தலை வடகிழக்கு ஒட்டியும், அவரின் கால்பகுதி தென்மேற்கு பகுதியாகவும் இருக்கும். வாஸ்துவின் தலைப்பகுதி உச்சப் பகுதியாகவும், அவருடைய கால் பகுதி நீச்ச பகுதியாகும். அதுதவிர மேற்கு முதல் வடமேற்கு வரை உச்ச பகுதியாகும். வாஸ்து பகவானின் தலைப்பகுதியான வடகிழக்கு மூலையில் எந்தவித பளுவான பொருள்களும் அவர் தலையில் வைக்கக்கூடாது என்பது முதல் கோட்பாடு. வீட்டின் நுழைவு வாசல் நீச்ச பகுதியில் அமைந்தால் அந்த வீட்டில் உள்ளவருக்கு ஒரு சில தர்ம சங்கடங்களை ஏற்படுத்தும்.
ஒரு மனையை முதலில் இரண்டாகப் பிரித்து, ஒரு பாகம் உச்சமாகவும் மறுபாகம் நீச்சமாகவும் பிரித்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக மனைக்குக் கிழக்கு திசையின் மையத்திலிருந்து வடக்கு பாகம் உச்சம் என்றும், தெற்கு பக்கம் நீச்சம் என்றும் கணக்கிடப்படுகிறது. இதேபோல் மற்ற திசைகளையும் சரியான முறையில் பிரிக்கலாம். ஒவ்வொரு வீட்டிலும் உச்ச பகுதியில் மகாலட்சுமி வரும் வழியாகச் சொல்லப்படுகிறது. வாஸ்துவின் முக்கிய அடிப்படை விதி உச்சம் நீச்சம் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. ஒரு சில மனைகள் நீச்சப் பகுதியில் வளர்ந்து இருந்தால் அந்த மனை வாங்க மாட்டார்கள். ஒரு வீட்டின் நுழைவு வாசல், ஜன்னல், மற்ற அறைகள் அனைத்தும் சரியான வாசலா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.
வாஸ்து முறைப்படி வீட்டின் நுழைவு வாயில், வரவேற்பறை, குடும்பத் தலைவன் தலைவி படுக்கும் அறை, குழந்தைகள் அறை, விருந்தினர் அறை, பூஜை அறை, படிக்கும் அறை, குளியல் & கழிப்பறை, பால்கணி, மற்றும் சமையலறைகளை முடிந்தவரைச் சரியான திசைகளில் வைக்க வேண்டும். இவற்றில் வீட்டின் நுழைவு வாயில் திசைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அது எந்த திசையில் வைத்தால் அது நமக்கு உச்ச பலனை அடையும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு உள்ள மற்ற அறைகளின் வாயில்கள் ஒவ்வொன்றுக்கும் எது உச்ச வாசல் என்று பார்த்து அமைக்க வேண்டும். உச்சம் என்பது நேர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் ஒரு சக்தி. காலி மனையைப் பிரதானமாகக் கொண்டு வீட்டின் கட்டடங்களின் முதன்மை தலைவாசல் மற்றும் உச்சம் நீச்சம் வாசல்களைப் பற்றி விளக்கமாகப் புரிந்து வரைபடத்தில் குறித்துக்கொள்ள வேண்டும். பின்பு அதற்கேற்ப கட்டடங்களைச் சரியான முறையில் கட்டவேண்டும். வீட்டில் உள்ள ஜன்னல்களையும் உச்சமான திசையில் அமைப்பது நன்று.
நான்கு திசைகளில் முக்கியமான வடக்கு கிழக்கு என்பது முதன்மை உச்சமாகச் சொல்லப்படுகிறது. இந்த திசையின் நுழைவு வாயில் ஒரு குடும்பத்தின் உயர்வுக்கு வழிகாட்டும். அதனால் தான் வீடு கட்டும் முன்பு அந்த இரு திசைகளில் பரப்பும் நீளமும் அதிகம் இடம் கொடுத்து வீட்டைக் கட்ட ஆரம்பிக்க வேண்டும். நீச்ச திசை என்று சொல்லப்படும் தெற்கு, மேற்கு திசைகளில் மலைகள் குன்றுகள் மற்றும் மேடு பகுதிகளாகவோ அல்லது மரங்களாகவோ இருந்தால் நலம் பயக்கும். வீடு கட்டும் பொழுது இங்கு வடக்கு கிழக்கை விட இந்த திசைகளில் அதிக காலி இடங்களை விடக்கூடாது. மனையின் வடக்கு மத்தியம் + ஈசானியம், கிழக்கு மத்தியம் + ஈசானியம், தெற்கு + தெற்கு அக்னி மற்றும் மேற்கு மத்தியம் + வமே வாயு பகுதிகள் உச்சப் பகுதிகளாகும் மற்றும் மற்ற பகுதிகள் நீச்ச பகுதிகளாகும். இன்னும் விளக்கமாகப் பார்த்தால் ஒரு வடக்கு பார்த்த வீடாக இருந்தால் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி உள்ள வாசல் உச்சவாசல். வடக்கு மற்றும் ஈசான மூலையில் குபேரன் மற்றும் சிவபெருமான் வாசம் செய்யும் இடம். அதுவே வடமேற்கு நோக்கிச் செல்லும் வாசல் நீச்ச பகுதியாகும். முக்கியமாக வடகிழக்கு மூலையில் வாசல் வைத்தால் உடல் ஆரோக்கியம், செல்வ விருத்தி கிட்டும். மற்றொரு பகுதியான தெற்கு பார்த்த வீடாக இருந்தால் தென்கிழக்கு நோக்கி உள்ள திசை உச்சமாகும் (அக்னி). அதுவே தென்மேற்கை நோக்கிச் செல்வது நீச்ச திசையாகும். இங்கு வாஸ்துவின் கால்பகுதி உள்ளது.
கிழக்கு பார்த்த வீடாக இருந்தால் வடகிழக்கு நோக்கிச் செல்லும் பாதையை உச்ச வாசல். அதுவே தென்கிழக்கு நோக்கி இருக்கும் வாசல் நீச்ச வாசல் ஆகும். மேற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்கு நோக்கி இருக்கும் திசை உச்ச வாசலாகவும் (வாயு). தென்மேற்கு நோக்கி இருக்கும் திசை முக்கிய நீச்ச வாசலாகும்.
சூரிய பகவான் ஒளியானது உள்ளே வரும் முக்கியமான வழியானது ஜன்னல் பகுதியாகும். எல்லா அறைகளையும் இயற்கை ஒளி கட்டாயம் தேவைப்படுகிறது. ஜன்னல்கள் இரட்டைப் படையில் வைப்பது நன்று. ஒரு அறையில் உள்ள ஜன்னல் வழியாகக் காற்று உள்ளே வந்து, எதிர்த் திசையாக வெளியே செல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக வடக்கு பகுதி என்று எடுத்துக்கொண்டால் வடக்கின் மையப்பகுதியிலிருந்து வடகிழக்கு வரை ஜன்னல் வைக்கலாம், கிழக்குப் பகுதி என்று எடுத்துக்கொண்டால் ஈசான மூலையிலிருந்து மத்திய கிழக்குப் பகுதி வரை ஜன்னல் வைக்கலாம். இந்த வடக்கு, கிழக்குப் பகுதியில் தெற்கு,மேற்கு திசைகளை விட ஜன்னல்கள் நீளமாக வைக்கலாம்.
ஒவ்வொரு அறையிலும் வடகிழக்கு மூலை சிறந்த பகுதியாகும். எப்பொழுதும் கன்னி (நிருதி) மூலையில் ஜன்னல்கள் வைப்பதைத் தவிர்க்கவும். ஒருசில நேரங்களில் ஜன்னல் நீச்ச பகுதியில் வைக்கும் நிலை ஏற்படும். எடுத்துக்காட்டாக ஒருசில வீட்டின் தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைக்கும் பொழுது கிழக்கு மற்றும் தெற்கு நோக்கிப் போகும் இடத்தில் சிறிய ஜன்னல் வைத்தால்தான் சூடு காற்று வெளியே செல்லமுடியும். இங்கு நீச்ச நிலை பார்க்க முடியாது. வீட்டில் காற்று ஒருபுறம் உள்ளே நுழைந்து எதிர்புறமாகக் காற்று வெளியே செல்வது நல்ல நேர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.
குடும்ப உறுப்பினர் சுவாசிக்கும் காற்று, வெளியே செல்ல ஒவ்வொரு ஜன்னலில் எதிர்புறமும் ஜன்னல் வைப்பது அவசியம் தேவை. அது நீச்ச பகுதியாக இருந்தாலும் அங்கு ஜன்னல் வைக்கும் நிலை ஏற்படும். ஆனால் அது உச்ச பகுதியில் வைக்கும் ஜன்னலை விட, நீச்ச பகுதியில் சிறிய ஜன்னல் வைக்கலாம். ஜன்னல்கள் வைக்கும்பொழுது ஆராய்ந்து சரியாக வைக்க வேண்டும். உச்சப் பகுதியில் பெரிய இரட்டை ஜன்னல்கள் வைக்கலாம். தென்மேற்கு ஓரத்தில் ஜன்னல் வைக்கவே கூடாது. அந்த வீட்டில் திருமணம் தடை அதிகம் இருக்கும். தென்மேற்கு எப்பொழுதும் மூடப்பட்ட நிலையாகும். இங்கு ராகுவின் ஆதிக்கம் அதிகம். ஒரு முன் கதவு வைக்கும் பொழுது பின் வாசல் அதற்கு எதிரியை வைப்பது நல்லது. ஒரு அழகிய வீடானது வாஸ்து முறைப்படி மனை, முக்கிய அறைகள், அவற்றுக்கு ஏற்ப நுழைவாயில்கள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் நேர்மறை ஆற்றலுடன், இயற்கை வெளிச்சத்துடன், நல்ல சுவாச புத்துணர்ச்சியோடு உயிரோட்டமிக்க வீடாக இருக்க வேண்டும்.