அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ...
சனி சுக்கிரன் சேர்க்கை பலமா - பலவீனமா?
ஒருவர் பொருளாதார யோகத்துடன் உயர சுக்கிரனும், வாழ்க்கையில் சரியான பாதையில் பொருளை ஈட்ட சனி பகவானும் முக்கிய காரணமானவர்கள். இவர்களின் சேர்க்கை என்பது 70% நன்மையே. நண்பேன்டா.. என்று சொல்லும் அளவுக்கு சுக்கிரனும் சனியும் சிறந்த நட்பு தன்மை கொண்டவர்கள். ஒன்பது கிரகங்களிலே இவர்களின் தசை கால அளவு அதிக எண்ணிக்கை கொண்டவை. சனிக்கு 19 வருடங்களும், சுக்கிரனுக்கு 20 வருடங்களும் தசைகளை நடத்தும் தன்மை கொண்டவர்கள். முக்கியமாக சுக்கிரன் வீடான துலாத்தில் சனி பகவான் நட்பான முறையில் உச்சம் பெறுகிறார். அதேசமயம் சனியின் வீடான மகர, கும்பத்துக்கு சுக்கிரன் யோகாதிபதியாகவும், சுக்ரன் வீடான ரிஷபம், துலாத்திற்கு சனி யோகராகவும் இருப்பார். ரிஷபத்திற்கு சனி, கும்பத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதிகள். ஆனாலும் இவர்கள் பாதகத்தைக் குறைந்த அளவிலும், யோகத்தை அதிக அளவிலும் செய்வார்கள். ஒருவருக்கு சுக்கிர திசை வந்துவிட்டது என்ற உடன் மனதிலும் முகத்திலும் புத்துணர்ச்சி ஏற்படும். அதுவே நீதி நியாயம் என்று நடக்கும் ஒருவருக்கு சனி திசை முடியும் தறுவாயில் அவருக்கு நிலையான பொருளாதாரத்தை அள்ளிக் கொடுத்துவிட்டுச் செல்வார்.
சனி சுக்கிரன் இருவருமே தங்கள் தசைகளில் நன்மையை அளிக்கிறார் என்று புலிப்பாணி சித்தர் தன் பாடலில்.. சனி திசை சுக்கிர புத்திக்காலம் 3 வருடம் 3 மாதங்களாகும். இக்காலகட்டத்தில் பெண்களால் மனமகிழ்வு உண்டாகும். இப்புத்தி வந்த நாள் முதல் வெகுவான பெருஞ்செல்வம் தனயோகம் உண்டாகும். எப்பொழுதும் அரசரோடு இணங்கி தினம்தோறும் மகிழ்வுடன் ஜாதகர் வாழ்வதோடு வரும்பொருள் உரைக்கும் மந்திரிமார்களோடு அவருக்குச் சமமான அணியலங்காரங்களும் ஏற்படும். கோள் சொல்லிக் கொள்ளி வைக்கும் பலவாகிய பகைவர்களும் இல்லாதொழிவர். பொன் மகளான லட்சுமிதேவி இச்செல்வ நலங்களைத் தருவாள் (புலிப்பாணி)”. அது தவிர சுக்கிர திசை சனி புத்தியில் தன லாபம், பூமி, மனை, அரசு சம்பத்துடன் வாழ நேரும், குலமாதர்கள், நல்ல மைந்தர்கள் அமைதலோடு, நாடு நகரங்கள் உண்டாகும், மிகப்பெரிய தனவந்தனாகி ஆளுமை மிகப் பெரு மன்னனாக வாழ்வான் என்று போகர் அருளிய புலிப்பாணியில் கூறப்பட்டுள்ளது.
சுக்கிரனின் முக்கிய காரகத்துவம் என்பது அடுத்தவரைக் கவர்ந்திழுக்கும் வசீகர தோற்றம், இனிக்க இனிக்கப் பேசும் தன்மை, சுகத்தைத் தரும் திருமண வாழ்க்கை, அழகிய வீடு, ஆடம்பர வாழ்க்கை, அறுசுவை போஜனம், உயர்தர வாகனங்கள் மீது மோகம், பெருஞ் செல்வ வளம், தங்களின் ஆசைகளைச் சுலபமாகப் பூர்த்தி செய்யும் திறன், பல்வேறு சொகுசான தொழில் செய்யும் திறன், காமம், வைரம் வெள்ளி சேர்க்கை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கு சனி கிரகம் சிறிது எதிர்மறையானவர் எடுத்துக்காட்டாகப் பழைய வீடு மற்றும் வாகனம், அழுக்கு, வியர்வை வெளிவரும் வரை உழைப்பு, கூட்டமான சூழல், வயது முதிர்ந்த தோற்றம், பிடிப்பில்லா வாழ்க்கை, சன்னியாசம், கஞ்சத்தனம் என்று மாறுபட்டு இருப்பார். இவர்கள் சேர்க்கை பெரும்போது பலன்கள் மாறுபட்டு இருக்கும். ஜாதகருக்கு சனிபகவான் சுக்கிரனோடு நெருங்கிய பாகையில் சேர்ந்தால், அவருடைய ஒழுக்கம் நீதி தர்மம் மாறுபடாது. இவர்கள் சேர்க்கை நல்ல விதமாக 60-70% கட்டாயம் இருக்கும். ஜாதகத்தில் அவர்கள் பாவத்திற்கு ஏற்ப இதனுடைய பலன்கள் பலமா பலவீனமா என்று வெளிப்படும்.
அசுபர் எனப்படும் சனி சுகபோகத்தை வெறுப்பவர், அவரோடு சுகாதிபதி சுக்கிரன் சேர்வது நல்லதா கெட்டதா?. களத்திராதிபதி சுக்கிரன், பற்றற்ற நிலையில் இருக்கும் சனியோடு சேரும்பொழுது சுகத்தைத் தருவாரா? சந்நியாசத்தை தருவாரா?. இருவரும் சேர்க்கைப் பெற்றால் உடலாலும் மனத்தாலும் என்ன மாதிரி பலன்களை வெளிப்படுத்தும் மற்றும் என்ன மாதிரி தொழில் செய்வார்கள் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
கால புருஷ தத்துவப்படி குடும்ப பாவங்களான 2க்கும் 7க்கும் உடையவர் சுக்கிரன் மற்றும் 9க்கும் 10க்கும் உடையவர் தர்ம கர்மாதிபதியான சனி பகவான். இவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பது ஒரு மனிதனை உயர்வான சரியான வழியில் செல்லும் வழிகாட்டும் கிரக சேர்க்கை. ஜாதகத்தில் சுகம் தரும் களத்திரத்திற்கு மற்றும் 7ம் இடத்திற்கு சுக்கிரனே உரிமையாளர். இவர் ஸ்தான பலம் பெற்று விட்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஜாதகத்தின் சுப பாவங்களான 2,4,5,7,9,11-ம் இடங்கள் அவர் கெட்டுப்போனாலோ, நீச்சம் பெற்றாலோ ஜாதகரின் முழு வாழ்க்கையில் சுகமும் மகிழ்ச்சியும் குறைவாகவே இருக்கும்.
சனியும் சுக்கிரனும் கட்டாயம் பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படுத்துபவர்கள். முக்கியமாக ஏழையான ஒருவன் படிப்படியாக உயர்வை நோக்கிச் செல்ல வழிக்கிட்டும். ஆனால் இவர்களோடு ராகு கேது தொடர்பு வந்தால் பொருளாதாரத்தில் ஒருசில தடை ஏற்படுத்தும். சனியும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் இருக்கும்பொழுது பார்வை பெறும் பொழுது அதிகமான பலன்களை வெளிப்படுத்தும். அதுவே சனி நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் இருப்பதும் சுக்கிரன் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடத்தில் சனி இருப்பதும் ஒருவித சேர்க்கை தான். இவற்றிற்கும் ஒரு சில நற்பலன்களையும் கொடுக்கும். சனி சுக்கிரன் என்பவர்கள் முக்கியமான இயற்கைக்கு மாறானவர்கள் ஆனால் நண்பர்கள். மகரம், கும்பம், மீனம், ரிஷபம், துலா லக்னத்திற்கு யோகாதிபதிகளாக சனி சுக்கிரன் மாறி மாறி செயல்படுவார்கள்.
முக்கியமாக இந்த லக்னக்காரர்களுக்கு இவர்களின் சேர்க்கை நற்பலன்களை வெளிப்படுத்தும். ரிஷபத்திற்கும் கும்பத்திற்கும் சனி சுக்கிரன் பாதகாதிபதியாக வந்தாலும், இவர்களின் சுப பலன்களை அதிகமாகவும், அசுப பலன்களை குறைவாகவும் செய்வார்கள். குரு சனி & சுக்கிரன் சனி சேர்க்கைகள் சிறிது தோஷங்கள் இருந்தாலும், பொருளாதாரத்தை உயர்த்த தான் செய்யும். சனியானவர் அவரின் தோழரான துலா வீட்டில் தான் உச்சம் பெறுகிறார். குருவின் வீடான மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெறுகிறார். ஒரு ஜாதகரின் உச்சம் என்பது அவருடைய மூல திரிகோண வீடு பாதிப்படையும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சனியும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றாலும், வக்ரம் பெற்றாலும் கொடுக்கும் பலனில் மாறுபாடுகள் கட்டாயம் இருக்கும்.
சனி சுக்கிரன் சேர்க்கை உள்ள ஜாதகர் வாழ்க்கையில் ஒட்டுமொத்த குடும்ப பிரச்னை இருந்தாலும், அவற்றை தவிடுப்பொடியாக்கி சந்தோஷத்தை ஏற்படுத்துவார்கள். இவர்கள் தன் குடும்பத்தாருக்கு நன்றி மிக்கவராக இருப்பார். எடுத்துக்காட்டாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இந்த சேர்க்கை இருக்கும்பொழுது வீட்டில் பொருளாதார சிக்கல் இருக்கும் நேரத்தில் தனக்கு வேண்டிய தேவைக்கேற்ப பொருள்களையும் வாங்கிக் கொண்டு மீதம் உள்ளதைச் சேமிக்கும் திறன் அந்தப் பெண்ணிற்கு உண்டு. இந்த சேர்க்கை குடும்ப ஒற்றுமையும், நன்றிமிக்க நட்பையும், காதலையும் பலப்படுத்தும் ஒரு சக்தியாகும். திருமணத்துக்குப் பிறகு குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்கும் தன்மை இவர்களுக்கு உண்டு. பெண் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் திருமணத்துக்குப் பிறகு வளர்ச்சியைக் காண்பார்கள். மனைவி நல்ல வேலைக்குச் சென்று பொருள்களை ஈட்டுவாள். களத்திரத்தில் ஏற்படும் எந்தப் பிரச்னை இருந்தாலும் அந்த ஜாதகர் சரிசெய்து கொள்வார்கள். ஆணுக்கு இந்த சேர்க்கை இருந்தால் மனைவியோ தாயோ அல்லது குடும்பத்தில் உள்ள திருமணமான பெண்கள் வேலைக்குச் சென்று அந்த பணத்தை பெரும் ஜாதகராக இருப்பான்.
சுக்கிரனோடு பாவிகள் சேர்வது, ஏழாம் அதிபதியோடு பாவிகள் சேர்வது திருமணத்திற்கான சிறிது சரியான சேர்க்கை அல்ல. இந்த சேர்க்கை 7ல் இருக்கும்பொழுது கவனம் தேவை. ஜாதகரின் ஏழாம் வீட்டு அதிபதியோடு சனியோ சுக்கிரனோ, அசுபத் தன்மை பெறக்கூடாது. திருமணத்தில் தடையும் அல்லது வயது முதிர்ந்தவரைத் திருமணம் செய்ய நேரிடும். சிலருக்கு அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வார்கள். இருவருக்கும் திருமண பொருத்தம் மற்றும் கிரக பொருத்தம் பார்க்கும் பொழுது சரியாக இருக்காது. அதுவே ஏழில் சனி நீச்சமாகவோ வக்ரம் பெற்று இருந்து, அதனோடு சுக்கிரன் சேர்ந்து இருந்தால் திருமணம் சீக்கிரம் முடிவு பெறும் அதோடு பிரச்னை கொஞ்சம் தவிர்க்கப்படும். அதுவே சனி உச்சம் பெற்று இருந்தால் திருமணம் தாமதப்படும். எடுத்துக்காட்டாக இவை சந்திரனோடு சம்பந்தப்படும் பொழுது திருமணம் முடியும் வரை கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கிரகங்களின் பாகை அளவு கொண்டு சனியின் பலம் சுக்கிரனின் பலத்தைப் பொருத்து திருமணம் நடைபெறும் முறையும், குடும்ப வாழ்க்கை பிரச்னையும் வெளிப்படும்.
பெண் ஜாதகத்தில் உச்சம் / ஆட்சி பெற்ற சுக்கிரனோடு சனி தொடர்பு பெறும் பொழுது செலவாளியாக இருப்பார்கள். முக்கியமாக ஆடை, கவரிங் பொருள்கள், கலைநயம் மிக்க காலணிகள், அலங்காரப் பொருள்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதற்கு அதிகப் பணத்தைச் செலவழிப்பார்கள். சிறிது காலம் பிறகு இந்தப் பொருள்களை எங்கு வைத்திருப்பார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இந்த சேர்க்கையில் ஒருவர் உச்சம் பெற்று அசுப பாவத்தோடு தொடர்பு பெற்றால், இவர்களுக்கு தகுதியற்ற காதல், கெட்ட சிந்தனைகள் ஏற்படுத்தும். இது சிறுவயதில் காமத்தைத் தூண்டும். அதனால் தவறான வழியில் செல்ல வாய்ப்பு உண்டு. சிறுவர் சிறுமியாக இருந்தால் பெற்றோர்கள் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். குடும்பத்தில் விரைவில் பிரச்னையை ஏற்படுத்தும். முக்கியமாக வீட்டில் அத்தை /மாமியார் இடையே பிரிவை ஏற்படுத்தும். இவர்கள் சேர்க்கை என்பது ஆழ்ந்து பார்க்கும் பொழுது பரிவர்த்தனை பெற்றுள்ளதா அல்லது மற்ற கிரகங்கள் சுபக் கிரகங்கள் பார்வை பெற்றுள்ளதா மற்றும் 6 8 12-களில் மறைவு பெற்றுள்ளதா அதற்கேற்ப பலன்கள் மாறுபடும்
இவர்கள் சேர்க்கை ரோக ஸ்தானம் அல்லது மறைவு ஸ்தானத்தில் வலுப் பெற்றால். அவரவர் தசை புத்தியில் நோயின் தன்மை வலு பெரும். இந்த சேர்க்கை எந்த மாதிரி நோயை ஏற்படுத்தும் என்று பொதுபலனை பார்ப்போம். சிறுநீரக பிரச்னை, வாதம், சர்க்கரை நோயால் ஏற்படும் கால் புண், கண்ணில் ஏற்படும் பாதிப்பு, பிறப்புறுப்புகளால் பாதிப்பு, விந்தணுக்கள் குறைபாடு, நீண்ட கால புண், ஹார்மோன் குறைபாடு, பால்வினை நோய், பரம்பரை நோய், உறுப்புகளில் அழுக்கு சேர்த்துப் பாதிப்பை தீவிரப்படுத்தும் தன்மை, முக்கியமாக இடுப்புக்குக் கீழே உள்ள பகுதி பாதிப்பு ஏற்படுத்தும்.
இதையும் படிக்க: வீட்டில் எந்தெந்த மரங்களை வைக்கலாம், எதை வைக்கக்கூடாது?
சுக்கிரன் சனி சேர்க்கை எந்த மாதிரி தொழிலைச் செய்ய வைக்கும் என்பதை பொது பலன்களாகப் பார்ப்போம். முழு பலனை எடுக்க வேண்டுமென்றால் D10 வர்க்கசக்கரத்தை பார்க்க வேண்டும். இந்த சேர்க்கை உள்ளவர்கள் அழகு சாதன பொருள்கள் உற்பத்தி, நடன வித்வான், திரைத்துறை, இனிப்பகம், ஜவுளிக் கடை, வைர வியாபாரம், தொல்பொருள் துறை, அழகுக்கலை நிபுணர், ஆடை வடிவமைப்பாளர், கட்டட கலைஞர்கள், வாகன உற்பத்தியாளர், பல்பொருள் அங்காடி (சந்திரன் தொடர்பு), மற்றும் சிறந்த தங்கம் வெள்ளி நகை வடிவமைப்பாளர்களாக இருப்பார்கள். நீண்ட கலாம் பயணிக்கும் கோச்சார சனி பிறப்பு கால சுக்கிரனைத் தொடும் காலம் மேல் சொன்ன பலன்களை வெளிப்படுத்தும். இந்த சேர்க்கை உள்ளவர்கள் பெருமாள், கருமாரி, அங்காள பரமேஸ்வரி, ஆஞ்சநேயர், சுகமுனிவர், ஆழ்வார்களையும், சித்தர்கள் மற்றும் விஷ்ணுவின் அவதாரங்களை வணங்கினால் நற்பலன்களை ஏற்படுத்தும்.