திருக்கணிதம் vs வாக்கிய பஞ்சாங்கம்: சனிப்பெயர்ச்சி சரியான தேதி எது?
சனிப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது 2025? அல்லது 2026? என்று அனைவரின் மத்தியிலும் பெரிய குழப்பமே நிலவி வருகின்றது.
தமிழகத்தில் பொதுவாக திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கம் என இருவகையான பஞ்சாங்கங்களை ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர்களால் பின்பற்றப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கம் என்பது கடந்த சில நூறு வருடங்களுக்கு முன்பு திருத்தப்பட்டு நடைமுறைக்கு வந்த பஞ்சாங்கமாகும்.
வாக்கிய பஞ்சாங்கமோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றி வரும் பஞ்சாங்கமாகும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பின்பற்றப்படுகிறது. இதனால் வாக்கிய பஞ்சாங்கமே சரி என்று கூறுபவர்களும் உள்ளனர். ஆனால் தமிழகம் தவிர்த்த பிற பகுதிகளில் உள்ள கோயில்களிலும் திருக்கணிதப் பஞ்சாங்கத்தையே பின்பற்றுகின்றன.
அதாவது ஒவ்வொரு நாள் காலையில் சூரிய உதயம் தொடங்கி இரவு வரையிலான கோள்களின் நகர்வுகளைக் கொண்டு, அந்தக் கோள்கள் அடுத்தடுத்து எப்படி சுழல்கின்றன என்பதைக் கணிக்கும் கணிதமே பஞ்சாங்கம் என்று சொல்லப்படுகிறது.
திருக்கணிதமோ, வாக்கிய பஞ்சாங்கமோ எது சரி என்று ஜோதிட ஆய்வாளர்கள் மத்தியில் குழப்பம் தீர்ந்தப்பாடியில்லை. அது ஒருபக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஜோதிடர்கள் அவரவர் பாணியில் பின்பற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சரி நாம் விஷயத்திற்கு வருவோம்.
சனிப்பெயர்ச்சி எப்போது 2025 - 2026?
சனிப்பெயர்ச்சி சரியான தேதியை வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் படி எப்போது என்பதை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
திருக்கணிதப்படி 2025 - மார்ச் 29-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. சுக்ல பிரதமையும் சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு 11:01-க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026 மார்ச் 6-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
சனிபகவானுக்கு உரியப் பரிகாரத் தலமாகத் திகழும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், பிராணேஸ்வரி திருக்கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படியே சனிப்பெயர்ச்சி கடைப்பிடிக்கப்படுகிறது.