மகா கும்பமேளா: ரூ. 7,500 கோடி மூலம் ரூ. 3 லட்சம் கோடி ஈட்டிய உ.பி. அரசு
மகா கும்பமேளாவில் ரூ. 7,500 கோடி முதலீட்டில் ரூ. 3 லட்சம் கோடி பெறப்பட்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை 45 நாள்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவால் மாநிலத்துக்கு கிடைத்த லாபம் குறித்த தகவல்களை சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிர்ந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ``கும்பமேளாவுக்கு மாநில அரசு முதலீடு செய்த ரூ. 7,500 கோடியில், கும்பமேளா ஏற்பாட்டுக்கு ரூ. 1,500 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது. மீதத் தொகை முழுவதும் பிரக்யாக்ராஜை அழகுபடுத்துவதற்காக செலவு செய்யப்பட்டது.
வெறும் ரூ. 7,500 கோடி முதலீடு செய்தபோதிலும், ரூ. 3 லட்சம் கோடியை ஈட்டி லாபம் பெறப்பட்டுள்ளது. மகா கும்பமேளா மூலம் போக்குவரத்து துறை மூலம் ரூ. 1.5 லட்சம் கோடியும், ஹோட்டல் துறை மூலம் ரூ. 40 ஆயிரம் கோடி, உணவுத் துறை ரூ. 33 ஆயிரம் கோடி, பிரசாதம் வழங்கும் துறை ரூ. 20 ஆயிரம் கோடி, நன்கொடை ரூ. 660 கோடி, சுங்க வசூல் துறை ரூ. 300 கோடி, இதர துறைகள் மூலம் ரூ. 66 ஆயிரம் கோடி ஈட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்
மகா கும்பத்தில் மொத்தம் 66.30 கோடி பக்தர்கள் பங்கேற்றனர், ஆனாலும் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்கள் எதுவும் மகா கும்பத்தில் நடக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.
பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது கும்பமேளா. 12 முறை கழித்து நடைபெறுவது மகா கும்பமேளா. அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது. அடுத்த மகா கும்பமேளா 2169 ஆம் ஆண்டு நடைபெறும்.
கும்பமேளாவின் முக்கிய அம்சமாக கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புராண நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது வழக்கம். கும்பமேளாவுக்காக திரிவேணி சங்கமத்தில் தற்காலிக நகரமே அமைக்கப்பட்டது. சுமார் 4 ஹெக்டேர் பரப்பளவில் 25 தனித்தனி பகுதிகள், 12 படித்துறைகள், 23 சமையல் கூடங்கள், 1.5 லட்சம் கழிப்பறைகள், 11 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.