Ooty: இந்த சம்மருக்கு ஊட்டி போறீங்களா? சிறப்பு மலை ரயில்கள் அறிவிப்பு; எந்தெந்த நாட்களில் தெரியுமா?
சுவிட்சர்லாந்து தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நீராவி ரயில் என்ஜின்கள் நீலகிரியில் நூற்றாண்டுகளைக் கடந்தும் இயங்கி வருகின்றன. யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய அந்தஸ்தைப் பெற்ற இந்த மலை ரயிலில் பயணிக்க உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகக் காணப்படும் கோடை சீசனில் பலரும் இந்த மலை ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் கோடை சீசனில் கூடுதலாகச் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வரவிருக்கும் கோடை சீசனில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுற்றுலாப் பயணிகள் வசதிக்காகக் கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை மார்ச் மாதம் 28- ம் தேதி முதல் ஜூலை 7- ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் ஊட்டி முதல் மேட்டுப்பாளையம் வரை சனி மற்றும் திங்கள்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதில், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை முதல் வகுப்பில் 40, மற்றும் இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள் இருக்கும்.

குன்னூர் முதல் ஊட்டி வரை மொத்தம் 220 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பிலும், 140 இருக்கைகள் இரண்டாம் வகுப்பிலும் இருக்கும். மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் ரயிலானது மதியம் 2.25 மணிக்கு ஊட்டியைச் சென்றடையும். காலை 11.25 மணிக்கு ஊட்டியிலிருந்து புறப்படும் ரயிலானது மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
