Siragadika Aasai: `சிறகடிக்க ஆசை மூலமாக பலரும் என்னை திட்டுறாங்க; ஆனா அதுதான் பாராட்டு' - சுஜாதா
`ஜில்லா விட்டு ஜில்லா வந்து' பாடல் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பரிச்சயமானவர் `ஈசன்' சுஜாதா. இந்தப் பாடலே இவரின் பெயருக்கு ஒரு அடையாளத்தையும் தேடிக் கொடுத்தது. நடன இயக்குநராக பல முன்னணி கதாநாயகன்களுடன் பணியாற்றியவர் அவ்வபோது சில கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் `சிறகடிக்க ஆசை' சீரியலில் சிந்தாமணியாக நமக்கு அறிமுகமாகியிருக்கிறார்!
சிறகடிக்க ஆசை
அது குறித்து நம்மிடையே பேசிய `ஈசன்' சுஜாதா,`` `சிறகடிக்க ஆசை' சீரியல்ல நான் இப்போதான் கொஞ்ச எபிசோடுகள்ல வந்துட்டு இருக்கேன். இப்போவே மக்கள்கிட்ட நல்லா பரிச்சயமாகியிருக்கேன். இந்த சீரியலுக்குப் பிறகு என்னுடைய பழைய நண்பர்கள் பலரும் எனக்கு கால் பண்ணி `சிறகடிக்க ஆசை என்னுடைய பேவரைட் சீரியல்.

அதுல நீங்க இருக்கிறது சந்தோஷம்'னு சொல்றது மனநிறைவைக் கொடுக்குது. இப்போ சமீபத்துல நான் ஒருத்தரோட மறைவுக்கு நேர்ல போயிருந்தேன். அங்க இறந்தவரோட பையனுக்கு சின்ன வயசுதான். அந்த சின்ன பையன் `நீங்கதானே சிந்தாமணி, நீங்க ஏன் மீனாவுக்கு எதிரியாக வர்றீங்க'னு கேட்டான். இந்தளவுக்கு அறிமுகமான கொஞ்ச நாளிலேயே அத்தனை மக்களுக்கு பரிச்சயமாகியிருக்கேன்.
`திட்டு வாங்கியிருக்கேன். அதெல்லாமே பாராட்டுகள்தான்'
சொல்லப்போனால், சிலர் என்னை திட்டவும் செய்றாங்க. இந்த கதாபாத்திரம் எப்படி இருக்கணும்னு இயக்குநர் குமரன் சார் தெளிவாக இருந்தாரு. படப்பிடிப்பு தளத்துல அவர் ரொம்பவே ஸ்டிரிக்ட்டாக இருப்பாரு. அதுதான் எனக்கும் ப்ளஸ் பாயின்ட்டாக இருந்தது. சிந்தாமணி கேரக்டர் இந்த கொஞ்ச நாட்களிலேயே பரிச்சயமானதுக்கு முக்கியக் காரணம் குமரன் சார்தான். எனக்கு நெகடிவ் கதாபாத்திரத்துல நடிக்கிறதுல எந்த தயக்கமும் இல்லை. என்னை திட்டுறதுக்காகவாச்சும் தினமும் சீரியல் பார்ப்பாங்க. அப்படி மக்கள் என்னை தொடர்ந்து பார்க்கும்போது எனக்கு சந்தோஷம்தான். என்னுடைய தோழி ஒருத்தவங்க டான்சராக இருக்காங்க. அவங்களும் ` தயவு செஞ்சு வில்லியாக மட்டும் நடிக்காதீங்க. என்னை அடிக்கிறாங்க'னு சொன்னாங்க. எனக்கு அந்த மாதிரியான அடி எதுவும் வரல. ஆனா, திட்டு வாங்கியிருக்கேன். அதெல்லாமே எனக்கு பாராட்டுகள்தான்.

சொல்லப்போனால், ஹீரோ - ஹீரோயின் கதாபாத்திரத்துக்குப் பிறகு மக்கள்கிட்ட அதிகமாக போய் சேர்றது வில்லன்கள்தான். அதுனால இந்த கதாபாத்திரத்துல நடிக்கிற விஷயமெல்லாம் எனக்கு ஹாப்பிதான்! அதே மாதிரி தியேட்டரை தாண்டி இப்போலாம் வீட்டுலேயே என்டர்டெயின்மென்ட் வந்துடுச்சு. நம்மளும் டெலிவிஷன் பக்கம் போகணும்னு நான் ஆசைப்பட்டேன். அந்த நேரத்துலதான் எனக்கு `வானத்தப்போல' சீரியலோட வாய்ப்புக் கிடைச்சது. அந்த சீரியலோட கோமதி கதாபாத்திரமும் என் மனதுக்கு ரொம்பவே நெருக்கமானது. " என்றார்.
தனது டான்ஸ் கரியர் குறித்து பேச தொடங்கிய சுஜாதா, `` எனக்கு என்னமோ தெரில பாடல்களோட ஒலி ஒரு மாதிரியான எனர்ஜியைக் கொடுக்கும். தியேட்டர்ல திரை திறக்கும்போது வர்ற சத்தம், மேள சத்தம் மாதிரியான ஒலியைக் கேட்டாலே எனக்கு நடனம் வந்திடும் அப்படிதான் என்னுடைய டான்ஸ் கரியர் தொடங்குச்சு. பள்ளி பருவத்திலேயே என்னுடைய டான்ஸ் கரியரை நான் தொடங்கிட்டேன்.

அப்போலாம் `வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்துல வர்ற வைஜெயந்திமாலா அம்மா மாதிரி நடனமாடணும்னு நினைச்சிருக்கேன். அப்போ, டான்ஸ் மூலமாக படங்களுக்குள்ள வர்றதுக்கு சில வழிமுறைகள் இருக்கும். இப்போ நடன இயக்குநராக இருக்கிற ஷோபி மாஸ்டரோட தந்தை பவுல்ராஜ்தான் எங்களுக்கு குருநாதர். அவருடைய குழுவுல இருந்தாலே பலருக்கும் நம்பிக்கை வந்திடும். பவுல்ராஜ் குழுனாலே கண்ண மூடிகிட்டு எடுத்திடுவாங்க. " என்றார்.