சென்னை: மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை - மாணவனைத் தேடும் போலீஸ்!
சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார் 26 வயது மாணவி ஒருவர். இவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவன் ஒருவன் தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக தெரிவித்திருந்தார். மேலும் இதற்கு சம்மதிக்கவில்லை என்பதால் தன்னை அசிங்கமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். புகாரின்பேரில் கானாத்தூர் போலீஸார், பாலியல் துன்புறுத்தல், பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல், மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து புகாரளித்த மாணவியிடம் விசாரித்தபோது இன்னொரு தகவல் வெளியானது. அது என்னவென்றால் கடந்த 2024 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனிமையில் இருக்க மாணவியை மாணவன் கட்டாயப்படுத்தியதாகவும் இந்தத் தகவலை மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது. அதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். புகார் கொடுத்த மாணவியைத் தவிர இன்னும் சில மாணவிகளுக்கும் அதே மாணவன் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து கல்லூரி நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் மாணவன், தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடிவருகிறார்கள்.