தமிழகத்தில் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.1) முதல் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஏப்.1) முதல் ஏப்.6 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.1-இல் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
பரமத்திவேலூரில் வெயில் சதம்: தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.