கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனித்தீர்மானம்!
கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்றும் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப்பெறவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் பேரவையில் பேசும்போது, “தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் கடுமையான தாக்குதல்களைச் சந்தித்துவருகின்றனர். இது முற்றுப்புள்ளி வைக்கமுடியாத பேரழிவாக அமைந்திருக்கிறது. எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், இது மட்டும் மாறவில்லை. இந்தியர் மீனவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மத்திய அரசு அவர்களை மறந்துவிடுகிறது” என்றார்.
மேலும், கடல் கடந்து போனவரின் கண்ணீரால் கடல் நீர் உப்பாக இருப்பதாக அறிஞர் அண்ணாவின் கூற்றை மேற்கோள் காட்டிய முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசுகையில், “கடல் நீர் இன்று சிவப்பாகும் நிலைமையில்தான் இருக்கிறது. தமிழக மீனவர்கள் சிந்திய ரத்தம் தான் என்று சொல்லும் நிலை இருக்கிறது.
மத்தியில் ஆட்சி அமைந்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படமாட்டார்கள் என்று பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு தேர்தலில் போது கூறினார். ஆனால், எதுவும் மாறவில்லை. இலங்கையில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் கூட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மொத்தமாக 97 மீனவர்கள் நாட்டுக்கு வெளியே சிறையில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். கடந்தாண்டு மட்டும் 530 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.
அண்டை நாடாக இருந்துகொண்டு தமிழக மீனவர்களைத் தாக்குவது வேதனையளிக்கிறது. மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இதுவரை 74 கடிதங்களை பிரதமருக்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் அனுப்பியிருக்கிறேன்” என்றார்.