ஊழியர்களின் கைகளில் ரத்தக் கறை: மைக்ரோசாஃப்ட் ஆண்டுவிழாவில் இஸ்ரேலுக்கு எதிராக ப...
Test Review: டி20 பரபரப்பைக் கூட்டும் ஒன்லைன், டிராவை நோக்கி ஆடப்படும் டெஸ்ட் மேட்ச் ஆனது ஏனோ?
அர்ஜுன் (சித்தார்த்) இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். ஆனால், கடந்த இரண்டு சீசன்களாக ஃபார்ம் இல்லாமல் தடுமாறுகிறார். இதனால், வரவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இறுதி டெஸ்ட் போட்டியுடன் அவரை ஓய்வு பெற வற்புறுத்துகிறது நிர்வாகம். அவரது பள்ளித் தோழியும் ஆசிரியையுமான குமுதா (நயன்தாரா), குழந்தையின்மையால் மனம் உடைந்து, தன் கணவன் சரவணனோடு (மாதவன்) கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கான IVF சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், மனைவியிடம் கேன்டீன் நடத்துவதாகப் பொய் சொல்லி, தனது புதிய கண்டுபிடிப்பு கனவுக்காகப் பெரும் தொகையைக் கடனாக வாங்கியிருக்கிறார் விஞ்ஞானி சரவணன். அந்தக் கடன் பிரச்னை அவரை இக்கட்டான சூழலுக்கு இழுத்துச் செல்கிறது. இவ்வாறு மூன்று மனிதர்கள், மூன்று பலப்பரீட்சைகள் என விரியும் கதைக்களம், எவ்வாறு ஒரு புள்ளியில் இணைகிறது, இதில் யாரெல்லாம் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதே ‘டெஸ்ட்’ படத்தின் கதை.
உச்சத்திலிருக்கும் ஒரு கிரிக்கெட் நட்சத்திரத்தின் ஆணவம், தோல்வியை ஒப்புக்கொள்ளாத திமிர், தந்தையின் பாசம் என வெவ்வேறு அடுக்குகளைக் கொண்ட பாத்திரத்தில் சித்தார்த். ஆரம்பத்தில் பேட்டை காற்றில் சுழற்றுவது போலத் தோன்றினாலும், இறுதியில் உணர்ச்சிகளைச் சுழற்றும் இடத்தில் பவுண்டரி அடித்திருக்கிறார். குழந்தையின் மீது பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், ஆரம்பக் காட்சிகளிலும் சற்றே சாந்தமாக யதார்த்தமான நடிப்பைக் கொடுக்கிறார் நயன்தாரா. ஆனால், போகப்போக மிகை நடிப்பு மீட்டருக்குள் சென்றது ஏனோ?! பல இடங்களில் அவரது பாத்திரம் என்ன பேச வருகிறது என்பதும் முழுமையடையவில்லை.
மாபெரும் கனவைக் கொண்ட சாதாரண மனிதனுக்கு ஏற்படும் தொடர் சோதனைகள், அதனால் உருவாகும் ஆழமான மனப்பிறழ்வு எனச் சவாலானதொரு பாத்திரத்தில் மாதவன். முதல் பாதியில் தன் வேடத்துக்கு ஆழம் சேர்த்தாலும், ஒரு திருப்பத்துக்குப் பிறகு தன் அதீத மிகை நடிப்பின் மூலமாகச் சோதிக்கவே செய்கிறார். மாஸ்டர் லிரிஷ் ராகவ், ஆதியாக தன் பங்கை உணர்ச்சிபூர்வமாகச் செய்திருக்கிறார்; ஆனால், அவர் முதிர்ச்சியாகப் பேசும் இடங்களை இயக்குநர் திரையாக்கத்தில் இன்னும் மெருகேற்றியிருக்கலாம். தாயாக சில காட்சிகளில் மட்டுமே வரும் மீரா ஜாஸ்மின், அங்கே தனது திறமையை நேர்த்தியாகப் பதிவு செய்கிறார். காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
மைதானத்தின் பரபரப்பையும், பாத்திரங்களின் உள்ளுணர்வையும் நன்கு படம்பிடித்திருக்கிறது ஒளிப்பதிவாளர் விராஜ் சிங் கோஹிலின் கேமரா. குறிப்பாக, ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது என்ற நம்பகத்தன்மையை உறுதி செய்து படத்திற்குப் பலம் சேர்க்கிறது ஒளிப்பதிவு. அதை நியாயமான முறையில் ஒழுங்குபடுத்தியிருக்கிறது படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷின் கத்திரி. அதேபோல, திரைக்கதையில் மூன்று மனிதர்களின் சோதனைகளை ஒரே புள்ளியில் இணைக்கும் கட்டமைப்பினைக் குழப்பமில்லாமல் தொகுத்திருக்கிறது படத்தொகுப்பு. இருந்தாலும், சீரான ஸ்டேஜிங் இல்லாத, நறுக்க வேண்டிய காட்சிகளை அப்படியே விட்டிருப்பது ஏமாற்றமே! பதற்றத்தைக் கூட்டும் வசனக் காட்சிகளில் ஒலிக்கும் அந்த கரகர பின்னணி இசையில் கவனிக்க வைக்கும் இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன், உணர்ச்சிபூர்வமான இடங்களில் அடிக்கடி ஒரே விதமான ‘ஹம்மிங்’கைக் கொடுத்து காட்சிகளை விட்டு விலக வைக்கிறார். பாடல்கள் பெரிதாக மனதில் நிற்காமல், படத்தின் ஓட்டத்திற்குத் தடையாகின்றன.
கதாபாத்திரங்களின் கட்டமைப்பு, அவர்களின் உளவியல் ரீதியான போராட்டங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்த விதம் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்கிறது. தன்முனைப்பு ஒரு மனிதனை எந்த எல்லைக்கு இழுத்துச் செல்கிறது என்பதை ஒரு கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் சஷிகாந்த். அது ஐடியாவாக சிறப்பாகத் தோன்றினாலும், ஒரு படமாக உருமாறுவதில் ‘சப்ப மேட்டர் - சால்ட் வாட்டர்’ ஆகியிருக்கிறது. உதாரணமாக, கிரிக்கெட் காட்சிகளின் பிரமாண்டத்தைத் தத்ரூபமாகக் கொடுத்துள்ள ஸ்டேஜிங், சாதாரண உரையாடல் காட்சிகளில் சுத்தமாக மிஸ்ஸாகிறது. மைய கதாபாத்திரங்களின் உளவியலை ஆழமாகப் பேசும் எழுத்து, அதை உயிர்ப்பிக்கும் நடிப்பில் காணாமல் போகிறது.

சற்றே பதற்றத்தைக் கொடுக்கும் அந்தக் கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு, திரைக்கதை தந்திருக்க வேண்டிய சுவாரஸ்யமான திருப்பங்களும் மிஸ்ஸிங்! நிஜமாகவே ஒரு டெஸ்ட் போட்டியைப் பார்க்கும் உணர்வு மட்டுமே மிஞ்சுகிறது. பெட்டிங் காட்சிகள், போலீஸ் விசாரணைக் காட்சிகள் ஆகியவை தர்க்க ரீதியாகக் கையாளப்படாமல், மிகவும் மேலோட்டமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவனைத் தன் வீட்டிற்குக் கூட்டி வரும் நயன்தாரா, ஏன் போனை சார்ஜ் செய்து குழந்தையின் தாயிடம் சொல்லவில்லை, குழந்தையின் தாய் புகார் கொடுக்காமலேயே நயன்தாரா ஏன் பள்ளியில் இடைநீக்கம் செய்யப்படுகிறார் எனப் பல லாஜிக் ஓட்டைகள் எட்டிப்பார்க்கின்றன. கிட்டத்தட்ட மூன்று கதாபாத்திரங்களுமே சுயநலமாக, தன்முனைப்போடு நடந்து கொள்ள, கடைசியில் அடிக்கப்பட்ட சிக்ஸரை யாருக்காக நாம் கொண்டாட வேண்டும் என்கிற பெரும் கேள்வியும் எழுகிறது.
தொழில்நுட்ப ரீதியாகவும், எழுத்தாகவும் ஓர் உளவியல் பரிசோதனையை நடத்தியிருக்கும் இந்த ‘டெஸ்ட்’, சற்றே சுவாரஸ்யமான திரைக்கதை, கதைக்குத் தேவையான நடிப்பு ஆகியவற்றையும் பெற்றிருந்தால், டிராவை நோக்கி ஆடப்படும் போரடிக்கும் டெஸ்ட் மேட்ச்சாக இல்லாமல், திருவிழாவாகக் கொண்டாடப்படும் டி20 மேட்ச் ஆகியிருக்கும்.