மார்ஷ், மார்க்ரம் அதிரடி: மும்பை இந்தியன்ஸுக்கு 204 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ முதலில் விளையாடியது.
மார்ஷ், மார்க்ரம் அதிரடி
முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது. லக்னௌ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் அய்டன் மார்க்ரம் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் எடுத்தனர். மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அய்டன் மார்க்ரம் 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவர்களைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 30 ரன்கள், டேவிட் மில்லர் 27 ரன்கள் எடுத்தனர்.
இதையும் படிக்க: நூர் அகமதை பாராட்டிய இந்திய சுழற்பந்துவீச்சாளர்!
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் கேப்டன் ஹார்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டிரெண்ட் போல்ட், அஸ்வனி குமார் மற்றும் விக்னேஷ் புதூர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.