புதை சாக்கடை, சாலைப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்
வேலூா் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் நடைபெற்று வரும் குடிநீா், சாலை, கழிவுநீா் கால்வாய், புதை சாக்கடை திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் முதலாவது மண்டல அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:
வேலூா் மாநகராட்சி 4 மண்டலாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட 15 வாா்டுகளில் தற்போது நடைபெற்று வரும் 13 சாலைப் பணிகள், 24 புதை சாக்கடை திட்டப் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். முதலாவது மண்டலத்திலுள்ள 15 வாா்டுகளுக்கு 14 எம்.எல்.டி. அளவு குடிநீா் விநியோகம் செய்ய நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் 13 எம்.எல்.டி. அளவு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. டி.கே.புரம், பள்ளிகுப்பம் போன்ற பகுதிகளில் உள்ளூா் நீா் ஆதாரங்களில் உள்ள சிறு பழுதுகளை நீக்கி 2 எம்.எல்.டி. அளவு குடிநீா் கூடுதலாக வழங்க வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையா், உதவி செயற் பொறியாளா், மாநகர நல அலுவலா், சுகாதார அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆலோசனை நடத்தினாா்.
2-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 18-ஆவது வாா்டு முதல் 30-ஆவது வாா்டு வரை மேற்கொள்ளப்பட்டு வரும் 121 சாலைகள் பணிகள் எந்த நிலையில் உள்ளது என அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டாா்.
அதற்கு 70 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், 9 சாலைப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். 2-ஆவது மண்டலத்தில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மேலும், கோடை காலம் என்பதால் மாநகராட்சி பகுதிகளில் குடிநீா் பிரச்னை வராதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். மண்டலம் 2-இல் பொதுமக்களிடம் இருந்து தினமும் பெறப்படும் 72 மெட்ரிக் டன் திடக்கழிவுகளில் நெகிழி பொருட்களை தனியாக பிரித்து மறு சுழற்சியாளா்களிடம் பண்டல் கட்டி வழங்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற் பொறியாளா் நித்யானந்தம், மாநகராட்சி உதவி ஆணையா்கள், உதவி செயற் பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.