மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாகிறாரா எம்.எஸ்.தோனி?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி செயல்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் 17-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதையும் படிக்க: மும்பை அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகுகிறாரா?
மீண்டும் கேப்டனாகிறாரா எம்.எஸ்.தோனி?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதாகவும், தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கெய்க்வாட் பிளேயிங் லெவனில் இடம்பெறாத பட்சத்தில், சிஎஸ்கேவை எம்.எஸ்.தோனி மீண்டும் கேப்டனாக வழிநடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியதாவது: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியின்போது, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டது. காயத்திலிருந்து அவர் எந்த அளவுக்கு குணமடைந்துள்ளார் என்பதை பொருத்தே நாளைய போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது தெரியும். அவருக்கு காயம் இன்னும் முழுமையாக சரியாகவில்லை. வலைப்பயிற்சியில் அவர் எவ்வாறு பேட்டிங் செய்கிறார் என்பதைப் பொருத்தே அணியில் இடம்பெறுவார். அவர் அணியில் இடம்பெறாத பட்சத்தில் அணியை யார் கேப்டனாக வழிநடத்துவார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இதையும் படிக்க: டி20 போட்டிகளில் 8,000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை!
ருதுராஜ் கெய்க்வாட் விளையாடாத பட்சத்தில் அணியை யார் கேப்டனாக வழிநடத்தப் போகிறார்கள் என்பது குறித்து அதிகம் சிந்திக்கவில்லை. ஏனெனில், பயிற்சியாளர் ஃபிளெமிங் மற்றும் கேப்டன் கெய்க்வாட் இருவரிடமும் இந்த மாதிரியான சூழல்களுக்கான திட்டங்கள் இருக்கும். எங்களிடம் அணியை வழிநடத்த இளம் வீரர் (எம்.எஸ்.தோனி) இருக்கிறார். அவர் ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் அணியை சிறப்பாக வழிநடத்துவார். அணியை வழிநடத்துவதில் அவருக்கு அதிக அனுபவம் இருக்கிறது. அவர்தான் அணியை வழிநடத்தப் போகிறாரா என உறுதியாகத் தெரியவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸை கேப்டனாக வழிநடத்தி வந்த எம்.எஸ்.தோனி, கடந்த ஆண்டு தனது கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் ஒப்படைத்தார். அதன் பின், ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவை கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.
இதையும் படிக்க: நூர் அகமதை பாராட்டிய இந்திய சுழற்பந்துவீச்சாளர்!
கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால், தொடர்ச்சியாக சிஎஸ்கே தோல்விகளை சந்தித்ததால் அந்த தொடரின் பாதியில் மீண்டும் எம்.எஸ்.தோனி சிஎஸ்கேவின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அணியை வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.