அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி! இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!
திருச்செந்தூர்: கடலில் கரை ஒதுங்கிய தீர்த்த கல்வெட்டுகள் - பாதுகாக்க கோரும் பக்தர்கள்!
முருகனின் இரண்டாம் படை வீடாக விளங்கி வருகிறது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் கடற்கரையில் அவ்வப்போது சில சில ஆச்சர்யங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமாவாசை, பெளர்ணமி நாட்களிலும் புயல் கன மழை எச்சரிக்கை காரணமாகவும், அலையின் திசைவேக மாற்றத்தாலும் இந்தக் கடல் அவ்வப்போது உள்வாங்குவதும், வெளியேறுவதுமாக நிகழ்ந்து வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் கடலரிப்பு ஏற்பட்டு பக்தர்கள் நீராட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடல் அரிப்பை தடுப்பதற்காக பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடல் அரிப்பு ஏற்பட்டபோது கடலிலிருந்து அவ்வப்போது சில கல்வெட்டுகள் கரைக்கு வந்தன. ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு கல்வெட்டாக வந்த இதனை எடுத்து ஆய்வு செய்தபோது அந்த கல்வெட்டில் முனி தீர்த்தம், மாதா தீர்த்தம், பிதா தீர்த்தம் என்று எழுதப்பட்டிருந்தன.
இது குறித்து ஆய்வு செய்தபோது ராமேஸ்வரத்தில் பல தீர்த்தகட்டங்கள் இருப்பதைப் போல, திருச்செந்தூர் கோயில் கடலை ஒட்டி தெய்வங்களின் பெயரால் 24 தீர்த்த கட்டங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவற்றில் ”தச கங்கா தீர்த்தம்” கிணற்றிலிருந்து மூலவர் சுவாமி சுப்பிரமணிய சுவாமிக்கு காலை, உச்சிகாலம், சாயரட்சை ஆகிய மூன்று வேளைகளில் அபிஷேகம் செய்வதற்காக நீர் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. கடந்த மாதம் சில தீர்த்த கல்வெட்டுகள் கிடைத்த நிலையில், இன்று மீண்டும் ஒரு தீர்த்த கல்வெட்டு கரை ஒதுங்கி உள்ளது.
கடற்கரையில் கிடந்த இந்த கல்வெட்டை அந்த பகுதியில் சுற்றி திரிந்த துறவி ஒருவர் கண்டு, கல்வெட்டின் மீது திருநீரை பூசி அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களை ஆய்வு செய்தார்.

அதில் ”கந்தமாதன தீர்த்தம்” என்று தலைப்பிடப்பட்டு எழுதப்பட்டிருந்தது. இதுபோன்று கடலில் கிடைக்கும் அரிய கல்வெட்டுகளை திருக்கோயில் நிர்வாகம் எடுத்து பாதுகாக்க வேண்டும். பக்தர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அத்துடன் இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் சிறப்புகள் குறித்து திருக்கோயில் கிரிப் பிரகாரத்தில் தகவல் பலகை அமைக்க வேண்டும் என, பக்தர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.