``வியூக அமைப்பாளர்களின் கையில் இன்றைய அரசியல் சிக்கியுள்ளது'' - CPIM மாநாட்டில் ராஜூ முருகன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கதில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், "இந்த மாநாடு வரலாற்று சிறப்பு மிக்கது. அடுத்த ஆண்டு மக்கள் ஜனநாயகத்தை தீர்மானிப்பதற்கான மாநாடு. எளிய மனிதர்களுக்கு வாய்ப்பளிக்கும் இயக்கம் இடதுசாரி இயக்கம் மட்டும்தான். மிகச்சிறந்த மனிதர்கள் எல்லோருமே கம்யூனிஸ்ட்கள் தான்.

கம்யூனி்ஸ்ட் என்பது கட்சி அல்ல, எல்லோருக்குமான, மனிதகுலத்திற்கான தத்துவம், சமத்துவத்தை நேசிப்பவர்கள் கம்யூனிஸ்ட். தாய்மைதான் கம்யூனிஸம், எல்லோருக்கும் எல்லாமும் என்பது தான் கம்யூனிசம்
நான் கம்யூனிஸ்ட் என்பதை பெருமையாக உணர்கிறேன், என்னை தோழர் என அழைக்கும்போது பெருமை கொள்கிறேன். தமிழ் சினிமாவில் கம்யூனிஸ்டாக அறிவித்துக்கொண்டு பயணிப்பதில் சிரமம் உண்டு, அந்த நேரத்திலும் கம்யூனிஸ்டாக இருப்பதுதான் முக்கியம்.
இந்தியா இக்கட்டான சூழலில் உள்ளது. காவி வெறியர்களுக்கு எதிராக மார்க்சிஸம்தான் மாற்று. வர்ணாஸ்ரமம், வர்க்க பிளவுக்கு எதிராக போராடுவது கம்யூனிஸம்தான்.
அம்பேத்கரும், பெரியாரும் மார்க்சிஸத்தை பின்பற்றியவர்கள். இந்தியாவில் ஜனநாயக சக்திகள் ஒன்றாக நிற்கவேண்டும், அதற்கு கம்யூனிஸம் தலைமை ஏற்க வேண்டும், சகோதர இயக்கங்களின் பிரச்னைகளால் அவர்கள் வளர்கிறார்கள். வேலைவாய்ப்பு திட்டம் என்னாச்சு என்று கேட்டால் தேவையற்ற பதிலை கூறி மடைமாற்றம் செய்கிறது பாஜக அரசு.
இடது சாரி ஜனநாயக அமைப்புகள் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும், கம்யூனிஸ்ட பக்கம் நிற்பது ஜனநாயகத்தின் பக்கம் நிற்பதாகும்.

தற்போது பணத்தை முன்வைத்து அரசியல் நிலை மாறிவிட்டது. கட்சி ஆரம்பித்தால் மக்களை சந்திக்காமல் கொள்கைகளை சொல்லாமல் வியூக அமைப்பாளர்களின் கையில் இன்றைய அரசியல் சிக்கியுள்ளது.
இந்நிலையிலும் மக்களுக்காக அறத்தை முன்நிறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி நிற்கிறது, அதனால் தான் கம்யூனிஸ்டோடு நிற்கிறோம். நாம் கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும் என இல்லை, உணர்வுப்பூர்வமாக மனிதத்தை வலியுறுத்தி பேசினாலே கம்யூனி்ஸ்ட்தான். நிச்சயம் நாம் தான் புதிய இந்தியா, பாசிஸ்ட்கள், நவ பாசிஸ்ட்கள இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். கம்யூனி்ஸ்ட் கொள்கையின் பின்னால் நிற்போம்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
