``திமுக கரை வேட்டி கட்டினால் நெற்றியில் பொட்டை அழித்துவிடுங்கள்..'' - ஆ.ராசா பேசியது என்ன?
தி.மு.க மாணவர் அணியின் மாநில அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாணவர் அணியின் மாநில செயலாளர் ராஜிவ் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் தி.மு.க மாணவர் அணி பொறுப்பாளரும் துணை செயலாளருமான எம்.பி ஆ.ராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினார்கள்.

அந்த கூட்டத்தில் பேசிய எம்.பி ஆ. ராசா, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என சொன்னவர் பேரறிஞர் அண்ணா. கள்ளம் இல்லாத உள்ளமே இறைவனின் இல்லம். அன்பு தான் கடவுள். மனிதனுக்கு மனிதன் காட்டுகின்ற இரக்க உணர்வில் தான் கடவுள் இருக்கிறார். என கடவுளுக்கான உதாரணங்கள் பல சொல்லப்படும் நிலையில், அந்த கடவுள் மீது நமக்கு கோபம் ஏதுமில்லை. தாய் தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப சாமி கும்பிடுங்கள். நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
மாணவர் அணியைச் சேர்ந்தவர்கள் தி.மு.க கரை வேட்டியைக் கட்டிக்கொண்டு வெளியே வரும்போது நெற்றியில் இருக்கும் பொட்டை அழித்துவிட்டு வெளியே வாருங்கள். ஏனென்றால் சங்கிகளைப் போன்று நீங்களும் நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு கையில் கயிறு கட்டியிருந்தால் தி.மு.க- வைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் தெரியாது. சாமி கும்பிடுங்கள். ஆனால், வெளியே வரும் போது பொட்டை அழித்து விட்டு வாருங்கள்" என்றார்.
எம். பி ஆ. ராசாவின் இந்த பேச்சு பொதுவெளியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.