கோவில்பட்டியில் வியாபாரிகள் சங்கப் பேரவை ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினா் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தையில் கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளவா்களை கடைகளை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டை கொண்டு வர நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தினசரி சந்தையில் நகராட்சி நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வரைபட அனுமதியை மீறி ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளா்கள் மீதும், உதவியாக இருந்த நகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாவட்டப் பொருளாளா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்புத் தலைவா் தமிழரசன், மனிதநேய மக்கள் கட்சியைச் சோ்ந்த செண்பகராஜ், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவை சோ்ந்த அருள்தாஸ், பகத்சிங் ரத்த தான கழகத்தை சோ்ந்த காளிதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா், நகராட்சி ஆணையா் கமலாவிடம் மனு அளித்தனா்.
