தடைகள் போக்கும் திங்களூர்
பாற்கடலைக் கடையும்போது தேவர்களுக்கு கிடைத்த கொடிய நஞ்சின் தீவிரம் வெப்பமாக மாறி, தேவர்களையும், அசுரர்களையும் சுட்டு பொசுக்கத் தொடங்கியது. தேவர்களுக்கு அபயம் அளிக்க, சிவன் தனது சீடர் ஆலாலசுந்தரர் மூலம் விஷத்தைப் பெற்று பருகினார். இருந்தாலும், விஷ வெப்பத்தின் தாக்குதலால் தேவர்கள் மயக்கம் அடைந்திருந்தனர்.
பாற்கடலைக் கடைந்தபோது பல பொருள்கள் வெளிவந்தன.
அவற்றுள் தோன்றிய சந்திரன், தேவர்களின் மயக்கத்தை தனது அமிர்தக் கலைகளால் மாற்றி மெய் குளிரவைத்தார்.
தச்சன் தனக்கு பிறந்த அஸ்வினி முதலிய 27 பெண்களைச் சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். ரோகினி, கார்த்திகை ஆகிய இரு மனைவிகளிடம் மட்டும் சந்திரன் பழக, ஏனையோர் முறையிட்டதால் தச்சன் சீற்றம் அடைந்தார். ""உன் கலைகள் நாள்தோறும் ஒன்று ஒன்றாகத் தேயும். அதனால் கூச ரோகம் அடையும்' என சந்திரனுக்கு தச்சன் சாபமும் தந்தான். சாபம் பெற்ற சந்திரனோ பூஜையை மேற்கொள்ள சிவனும் மெச்சி, "மாதத்தின் ஒரு பட்சத்தில் உன் கலைகள் தேயும். மற்றொரு பட்சத்தில் வளரும்' என அருள்பாலித்தார்.
தேவர்களாலும் அசுரர்களாலும் பாற்கடல் சிதைக்கப்பட்ட போது, அசுரர்களில் ஒருவன் தேவர் வேடமணிந்து விஷ்ணு
விடமிருந்து அமிர்தத்தைப் பெற்றான். இதை சந்திரனால் விஷ்ணுவும் அறிய அவர் கோபத்துடன் அரக்கனை இரண்டு துண்டுகளாக வெட்டியபோது, ஒரு பாம்பின் தலை, வால் பகுதிகளுடன் சேர்ந்து ராகு, கேது பகவான்களாக உருவெடுத்தனர். இருவரும் சந்திரனைப் பழிவாங்க விரும்பினர். ஆனால் சிவனின் கருணையால், சந்திரனும் வளர்ந்து, அளவு குறையும் வரத்தைப் பெற்றார்.
சிவனை நோக்கி சந்திரன் தவம் புரிந்து, சாப விமோசனம் பெற்ற தலம் நவக் கிரக தலங்களில் இரண்டாவது தலமாக விளங்கும் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.
இந்தத் தலம் அப்பூதி நாயனார் அவதாரத் தலமாகும். "ஒருமுறை திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசரை தமது இல்லத்தில் உணவருந்த அழைத்தார் அப்பூதி நாயனார். தோட்டத்தில் வாழை இலை பறித்து வருமாறு தமது சிறு மகனை அப்பூதி நாயனார் அனுப்ப, அங்கு பாம்பு கடித்து சிறுவன் இறந்தார். தமது துயரத்தைத் வெளிக்காட்டாத அப்பூதியும் திருநாவுக்கரசருக்கு உணவு பரிமாறினார்.
திருநாவுக்கரசரோ சிறுவனின் சடலத்தைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று இறைவன் முன் கிடத்தி, திருப்பதிகம் பாட சிறுவன் உயிர்பெற்றார்' என்பது தல வரலாறு.
இறைவி பெரியநாயகியோ கிழக்கு நோக்கி இருக்க, வெண்மை நிற சந்திரன் தென்கிழக்கு திசை நோக்கி இருக்கிறார். திராவிட கட்டடக் கலை அமைப்பில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. ஐந்து நிலை வாசல் கோபுரத்துடன், இக்கோயில் இரண்டு பிரகாரங்களைக் கொண்டுள்ளது. முருகன், கஜலட்சுமி, விநாயகர் உள்ளிட்ட சந்நிதிகளுடன் சந்திரனுக்கு தனி சந்நிதியும் உள்ளது.
பெüர்ணமி, திங்கள்கிழமைகளில் சந்திர தோஷம் நீங்க வீட்டு பச்சரிசியில் ஒரு கைப்பிடி எடுத்து, சந்திரனை பிரார்த்தனை செய்து, அதனை பறவைகளுக்கோ, பசுவுக்கோ கொடுப்பது நடைமுறையில் உள்ளது.
கடக ராசிக்காரர்கள் கயிலாசநாதரையும், சந்திர பகவானையும் வழிபடவேண்டும். சந்திரனுக்கு வெள்ளை அரளி மலர், வெள்ளை ஆடைகள், வெல்லம் கலந்த அரிசி, தயிர் கலந்த அன்னம் படைக்க வாழ்க்கையில் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும் என்பது
நம்பிக்கை.
பங்குனி பெüர்ணமியன்று காலை அபிஷேகம் முடிந்து சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். சூரியோதய நேரத்தில் சரியாக திரை நீக்க ஒருசில விநாடிகள் எழும் கதிரவனின் கதிர்கள் ஈசனைத் தொட்டு வணங்க கற்பூர ஆரத்தி நடக்கும், தொடர்ந்து உற்சவரை எழுந்தருளச் செய்து காலைக்குள் 6 முறையும், மாலை 4 முறையும் லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெறும். மாலை சந்திரோதயம் நடக்கும்போது, சந்திரனின் கதிர்கள் ஈசனைத் தொட்டு வணங்கும். அது முடிந்து தரிசன நேரத்துக்குப் பிறகு சந்தனம் களைந்து அபிஷேகம் நடைபெறும்.
இந்த ஆண்டு பங்குனி பெüர்ணமி ஏப்ரல் 12}இல் சிறப்பு பூஜைகள நடைபெறுகின்றன. தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக 14 கி.மீ. தொலைவில் திங்களூர் கோயிலை அடையலாம்.
}இரா.இரகுநாதன்