மலை மேல் அருள்புரியும்..
"கரன், திரிசிரன், தூசனன் என்ற மூன்று அசுர சகோதரர்களில், இறைவனை கரன் வழிபட்டு வருகிறான்.
ஒருநாள் இந்திரன் முதலான தேவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அசுரன் அங்கு வரவே, தேவர்கள் எறும்பு வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டனர். எறும்புகள் தன்னை எளிதாக வழிபட, கருணையுடன் தன்னை சற்று சாய்த்து தந்தார் இறைவன்' என புராண வரலாறு கூறுகிறது. இதற்காகவே கோயிலின் சிவலிங்கம் இடதுபக்கம் சற்று சாய்ந்து காணப்படுகிறது.
இத்தலம் பிரமபுரம், லட்சுமிபுரம், மதுவனபுரம், ரத்னகூடம், குமாரபுரம், பிப்பிலீசுவரம், தென் கயிலாயம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. தற்போது "திருவெறும்பூர்' என்று அழைக்கப்பட்டாலும், கல்வெட்டுகளில் இவ்வூர் "திருஎறும்பியூர்" என்றே அழைக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் கோயிலுக்கு முன் அழகிய குளம் அமைந்துள்ளது. இக்குளம் பதுமதீர்த்தம், குமாரதீர்த்தம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
திருக்குறுந்தொகையில் "எறும்பியூர் மலையான் எங்கள் ஈசன்' என்று திருநாவுக்கரசர் போற்றுகிறார். "அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு இன்பனாகும் எறும்பியூர் ஈசன்' என்றும் "எறும்பியூர் மலைமேல் மாணிக்கம்' என அவர் தனது திருத்தாண்டகத்திலும் இறைவனைப் போற்றுகிறார்.
திருநாவுக்கரசர் பாடிய 7}ஆம் நூற்றாண்டில் செங்கல் கட்டுமானமாக இருந்த இந்தக் கோயில் 9}ஆம் நூற்றாண்டில் ஆதித்த சோழன் காலத்தில் செம்பியன் வேதிவேளானால் கற்கோயிலாகக் கட்டப்பட்டது. முதலாம் ஆதித்த சோழன் காலக் கல்வெட்டுகளில் காவிரியின் தென்கரையில் "ஸ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த தென்கயிலாயத்து மகாதேவர் கோயில்" எனக் குறிப்பிடப்படுகிறது.
இறைவன் "திருஎறும்பியூர் ஆழ்வார்', "மலைமேல் மகாதேவர்';, "திரு எறும்பியூர் உடைய நாயனார்";, "திருபுவனசுந்தரர்' என்றும் இறைவி "நறுங்குழல் நாயகி", "செüந்தரநாயகி', மதுவனவேசுவரி இரத்தினாம்பாள்' என்றும் போற்றப்படுகின்றனர்.
சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் கோயில் வழிபாட்டுக்கும், ஊரில் நீர்பாசனத்துக்கும் சிறந்த தொண்டுகளைச் செய்துள்ளனர். தேவாரத் திருமுறைகள் இன்னிசைக் கருவிகளுடன் பாடவும், கோயில் ஊழியர்களுக்கு மடவிளாகம் அமைக்கவும், மலை மீது சத்திரம் அமைக்கவும், கோயில் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச ஏரி வெட்டி வாய்க்கால்களை அமைத்தும் பெருந்தொண்டை கிளியூர் நாட்டுச் சிறுதாவூரைச் சேர்ந்த வேளாண் வீரநாராயணனான "செம்பியன் வேதி வேளான்" குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். திருச்சி } தஞ்சாவூர் சாலையில் திருவெறும்பூருக்கு சற்று முன்னர் குன்றின் மீதுள்ள கோயிலை இந்திய தொல்லியல் துறை போற்றி பராமரித்து வருகிறது.
கோயிலுக்கு ஏப்ரல் 7}இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
}கி. ஸ்ரீதரன், (தொல்லியல் துறை } பணி நிறைவு).