தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
கேட்டது கிடைக்கும்...
போர்க் களத்தில் தனக்கு உதவி புரிந்த கைகேயிக்கு இரு வரங்கள் தருவதாக தசரதன் அளித்த வாக்குறுதியால், ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றார். சீதையும், லட்சுமணனும் உடன் சென்றனர். ராமரின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி செய்தார் பரதன்.
சீதையை கவர்ந்து சென்று அசோக வனத்தில் சிறை வைத்தான் இலங்கை மன்னன் ராவணன். வானரப் படையின் உதவியுடன் ராமனும், லட்சுமணனும் சீதையைத் தேடும்போது, வழியில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்தனர். ராமரை ஓய்வெடுத்து உணவருந்திச் செல்லும்படி மகரிஷி கேட்டார். மீண்டும் சீதையுடன் இந்த இடத்துக்குத் திரும்பும்போது தங்குவதாக உறுதியளித்து ராமர் புறப்பட்டார். ராவணனை வெற்றி கொண்டு, சீதையுடன் புஷ்பக விமானத்தில் இங்கு வந்தடைந்தார் ராமர்.
இடையில் நந்தி கிராமத்தில் வனவாசம் முடிந்து திரும்பிக் கொண்டிருப்பதையும், குறித்த காலத்தில் அயோத்தியை அடைவதையும் பரதனுக்கு தெரிவிக்க அனுமனும் பறந்தான். விருந்தோம்பி மரியாதை செய்வதில் ஆர்வமாக இருந்தார் பரத்வாஜர்.
அயோத்தியில் நடைபெறும் பட்டாபிஷேகத்தில் தான் பங்கேற்க இயலாத நிலையை எடுத்துக் கூறி தனது கிரீடத்துடன் (முடி) தரிசனம் தருமாறும் நாளும்கோளும் நன்னிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டி ராமரிடம் வேண்டினார். ரங்கநாதரின் ஆசிகளைப் பெறாமல் இதைச் செய்ய முடியாது என்று ராமர் கூறியபோது, பரத்வாஜரின் வேண்டுகோளைப் பயன்படுத்தி ரங்கநாதரை இங்கு எழுந்தருள்வித்தார். மறுப்பேதும் சொல்லவியலாத நிலையில் ராமரும் சீதை, லட்சுமணன் துணையிருக்க பரத்வாஜரின் விருப்பத்தை நிறைவேற்றி காட்சி தந்தார்.
அனுமன் திரும்பி வருவதற்குள், ராமர் மகுடத்தை அலங்கரித்து களைந்து உணவை உண்டு முடித்து விட்டார். தனது வருகைக்காக காத்திருக்காமல் முதல்முறை முடிசூடியதைக் காணமுடியாமலும், உணவை எடுத்து வைக்காததாலும் வருத்தமடைந்த அனுமன் ஊருக்குள் நுழையாமல் வருத்தத்துடன் வெளியே நின்றார்.
"முடிகொண்டான்' என்பது ராமரைக் குறிக்கும் சொல்லாகும். 10 முடித்தலை ராவணனின் முடி உதிர்த்து இவ்வூரில் திருமுடியுடன் காட்சி கொடுத்ததையும் அதன் மொழிபெயர்ப்பாக "மகுடவர்தனபுரம்' என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. வால்மீகி ராமாயணம் யுத்தகாண்டம் 124}ஆவது பகுதியின் முதல் பாடல், பரத்வாஜ ஆசிரமம் என்று அழைக்கப்படும் முனிவரின் பர்ணசாலையானது இந்தப் பகுதியைக் குறிக்கிறது.
பரத்வாஜர் தவம் செய்த ஆசிரமம் இருந்த இடத்தில் கோயிலாக உருவாகியது. மூலவர் தலையில் மகுடத்துடன் இருந்து அருளுகிறார் ராமர், சீதை, லட்சுமணன் கருவறையில் எழுந்தருளியுள்ளனர், உற்சவர் ராமரும் கழுத்து, இடுப்பை வளைத்து, திரிபங்க நிலையில் கையில் கோதண்டம், அம்புடன் அருள்கிறார். மடப்பள்ளியின் மேல் சுவரின் உள்ளே பழமையான கல்வெட்டு உள்ளது.
கோயில் வெளியே குளம் ஸ்ரீராம தீர்த்தக்கரையில் அனுமன் சந்நிதி உள்ளது. அனுமன் தனது கோபத்தில் தனக்கு பிடித்த வாழைப்பழம் உண்ணாத வகையில், இங்கு விளையக் கூடாது என்று முடிவு செய்து வாழை தோப்பாக விளையக்கூடாது என சாபமிட்டதாக நம்பப்படுகிறது. இன்றுவரை முடிகொண்டானில் வாழைமரங்கள் தோப்பாக வளர்வதில்லை.
வால்மீகி முனிவர் காலத்து உருவான இந்தக் கோயில் 12}ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது. முடிசூட்டிய கோலத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலாகும். ராமர் பூசித்த ரங்கநாதர் விபீஷ்ணனுக்கு அருள தெற்கு நோக்கி கிடந்து அருள்கிறார்.
இழந்த பதவி, சொத்து, சுகம், பொருள்கள் மீட்டுத் தரவும், தேர்வுகளில் தேர்ச்சி பெறவும், திருமணம் கை கூடவும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வேண்டுதல் செய்து பலன் பெறுகின்றனர். திருவாரூர் மாவட்டம் , நன்னிலம் வட்டத்தில், முடிகொண்டான் உள்ளது.
பரத்வாஜ முனிவரின் ஆசிரமமே கோயிலாக அமைந்ததால் வழக்கமான முறைகளில் இல்லாமல் ஸ்ரீராம நவமி உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி உற்சவம் மார்ச் 29}இல் துவங்கி 5}இல் நடைபெறுகிறது. ஏப்ரல் 6}இல் விசேஷ திருமஞ்சனம், 7}இல் திருக்கல்யாணம், 8}இல் ஆஞ்சனேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
இரா.ரகுநாதன்