Dhoni: "தோனிக்கெதிராக இவ்வாறு செய்யக் கூடாது; அவர் ஒய்வுபெற்றால்..." - கெயில் கூறுவது என்ன?
ஆர்.சி.பி-க்கெதிரான போட்டியில் 13 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து வெற்றிக்கு 100+ ரன்கள் தேவை என்று சிஎஸ்கே தத்தளித்த நேரத்தில், தோனி இறங்காமல் அஸ்வின் இறக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதமே போய்க்கொண்டிருக்கிறது.
பலரும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். சிலர் தோனிக்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அதிரடி வீரரான கிறிஸ் கெயில் தோனிக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் ஊடகத்துடனான நேர்காணலில் பேசிய கெயில், ``ஐபிஎல்லுக்கு நிறைய மதிப்பைத் தோனி கொண்டு வந்திருக்கிறார். முடிந்தவரை அவரைப் பார்க்க வேண்டும், அவர் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.
அவரை வெளியேற்ற விரும்பவில்லை. ஆனால், இது போன்ற கூச்சல்களை நீங்கள் கேட்கும்போது, ஒரு மிகப்பெரிய வீரரருக்கு மக்கள் மூலம் தவறான செய்தி அனுப்பக்கூடும்.

5 முறை சாம்பியன் பட்டம் வென்றவர், ஒருவேளை ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றால் ஐபிஎல்லின் மதிப்பு சற்று குறையும். தன்னுடைய அணிக்காக அவர் செய்திருப்பவை மிக அற்புதமானவை.
இந்தியாவில் சிஎஸ்கே எங்கு விளையாடினாலும் அங்கு முழுக்க முழுக்க `விசில் போடு' தான். அதுதான் பவர். அதைத்தான் ஐபிஎல்லுக்கு தோனி கொண்டுவந்திருக்கிறார்.

அவரின் விக்கெட் கீப்பிங் திறன் இன்றும் சிறப்பாக இருக்கிறது. அவர் மிகவும் கூர்மையாக இருக்கிறார். எனவே, இது அணிக்காக அவர் எப்படி விளையாடப் போகிறார், அணி அவரை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப்போகிறது என்பது பற்றியது.
எல்லோருமே தோனியைப் பார்க்க விரும்புகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, அவர் எங்கு பேட்டிங் இறங்கினாலும் பிரச்னை இல்லை. 11-வது இடத்தில் அவர் இறங்கினாலும், மக்கள் அவரைப் பார்க்கும் வரையில் சிஎஸ்கே மற்றும் ஐபிஎல்லின் ஓர் அங்கமாக அவர் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
ஏப்ரல் 5-ம் தேதி சேப்பாக்கத்தில் டெல்லி அணியை சென்னை அணி எதிர்கொள்ளவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.