CPIM congress: ``மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் இரண்டு தீர்மானங்கள் இதுதான்'' - பிருந்தா காரத்
மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் முதல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

மதுரையில் CPIM கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, கடந்த 2 ஆம் தேதி தொடங்கி, வருகின்ற 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மாநாட்டின் இரண்டாவது நாளில் இதுகுறித்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் செய்தியாளர்களிடம் பேசும்போது,
"ஐந்து நாள்கள் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் நாடு முழுவதுமிருந்து பிரதிநிதிகளும், பாரவையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட வரைவு அரசியல் தீர்மானத்தில் கருத்துகள் கேட்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் கட்சி மேற்கொண்ட அரசியல் யுக்தி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு கட்சி மேற்கொள்ளவுள்ள அரசியல் யுக்தி குறித்து பிரதிநிதிகள் தஙகள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
வகுப்புவாத சக்திகள், கார்ப்பரேட்களுடன் இணைந்து மக்களை பிளவுபடுத்தும் கொள்கையை பரப்புகின்றன.
பாஜக தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து மூன்று முறை மத்தியில் ஆட்சியில் இருப்பதால், ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் அதிகாரத்தை பயன்படுத்தி, மாநிலத்தின் அனைத்து துறைகளிலும் ஊடுருவி, முழு சமூகத்தையும் வகுப்புவாத மயமாக்குகின்றன.

இந்துத்துவா சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கு, கட்சியின் சுய பலத்தை கட்டியெழுப்புவது அவசியம். இதற்காக, வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களை வலுப்படுத்த கம்யூனிஸ்டு இயக்கங்கள் அழைப்பு விடுக்கிறது.
இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், வகுப்புவாதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் இணையத்தயாராக உள்ள அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்சிகளையும் அணி திரட்ட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதத்திற்காக மாநாட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வரைவு அரசியல் தீர்மானத்தில் 3,424 திருத்தங்களும் 84 பரிந்துரைகளும் பெறப்பட்டன. இவற்றில் 133 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் இரண்டு தீர்மானங்களில், 'தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் வருகின்ற மே 20 அன்று நடத்தும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து முதல் தீர்மானமாகும்.
'ஆர்எஸ்எஸ் - பாஜக மற்றும் சங் பரிவாரின் கொடூரமான வகுப்புவாத தாக்குதல்களை எதிர்த்தல்' என்பது இரண்டாவது தீர்மானமாகும்" என்று தெரிவித்தார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
