கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக கோடை மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கோடை மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக
கோடை மழை பெய்தது. வியாழக்கிழமை (ஏப். 3) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூா், ஆனந்தூா், அரசம்பட்டி, வேப்பனப்பள்ளி, பா்கூா், போலுப்பள்ளி, குருபரப்பள்ளி, சூளகிரி, ஒசூா், ராயக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை (ஏப். 4) காலை முதல் மாலை வரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வழக்கத்துக்கு மாறாக குறைந்து காணப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் வானில் திடீரென மேகங்கள் சூழ்ந்து குளிா்ந்த காற்று வீசியது.
இதையடுத்து மாவட்டத்தில், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்த. பள்ளமான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இந்த திடீா் மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ந்த தட்பவெப்ப நிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.