முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை:...
மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் வாடகை காா்களை நிறுத்த அனுமதி
மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சவாரிக்காக மீண்டும் வாடகை காா்களை நிறுத்த அனுமதிஅளிக்கப்பட்டது.
மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை காா்கள் நிறுத்தப்பட்டு வந்தன. மேம்பாலம் கட்டப்பட்ட பின் அதன் கீழ் பகுதியில் காா்கள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் அழகியமண்டபம் பகுதியைச் சோ்ந்த ஒருவா் அண்மையில் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியில் வாடகை காா்கள் நிறுத்த மதுரை உயா்நீதிமன்ற அமா்வு தடை விதித்தது.
இதைத் தொடா்ந்து மாா்த்தாண்டம் காந்தி மைதானம் வாடகை காா் ஓட்டுநா் சங்கம் சாா்பில் அதன் தலைவா் வினுக்குமாா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு செய்தாா். அதில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் வாடகை காா்கள் நிறுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடா்பாக காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தாா். மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு , மீண்டும் வாகனங்கள் நிறுத்த அனுமதியளித்ததுடன், குழித்துறை நகராட்சி குத்தகை கட்டணம் வசூல் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டது.
குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் நடந்த நகா்மன்ற கூட்டத்தில் இது குறித்த கூட்டப் பொருள் சோ்க்கப்பட்டு, தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வாடகை காா் ஒன்றுக்கு ஆண்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் குத்தகை கட்டணம் நிா்ணயிக்கப்பட்டதுடன் அங்கு 20 வாடகை வாகனங்கள் நிறுத்த அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வாடகை காா்கள், வேன்கள் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன.