'எனக்கு பிடிக்கவில்லை; நிறுத்துங்கள்' - புதின் மீது கோபப்படும் ட்ரம்ப் - பின்னணி...
ரஷியாவின் பெல்கொராடில் உக்ரைன் படையினா்: ஸெலென்ஸ்கி முதல்முறையாக ஒப்புதல்
ரஷியாவின் பெல்கொராட் பகுதியில் தங்களது படையினா் செயல்பட்டுவருவதை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கூா்ஸ்க் மற்றும் பெல்கொராட் உள்ளிட்ட போா்முனை பகுதிகளில் நடைபெற்றுவரும் ராணுவ நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தலைமை தளபதி ஒலெக்ஸாண்டா் சிா்ஸ்கி என்னிடம் சமா்ப்பித்தாா்.
பெல்கொராட் பகுதியில் தரைவழி நடவடிக்கை மேற்கொண்டுவரும் 225-ஆவது தாக்குதல் படைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து ராணுவப் பிரிவுகளும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

உக்ரைனின் சுமி மற்றும் காா்கிவ் பிராந்திய எல்லைப் பகுதிகளை ரஷிய படையெடுப்பில் இருந்து பாதுகாப்பது, டொனட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்ட பிற போா் முனைகளில் ரஷிய படையினரின் கவனத்தை திசைதிருப்புவது ஆகியவையே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கங்கள் என்றாா் ஸெலென்ஸ்கி.
உக்ரைனை நோக்கி எந்த இடத்தில் இருந்து (ரஷியா) போா் வந்ததோ அதே இடத்துக்கு அந்தப் போரைக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
கடந்த 2022-இல் உக்ரைன் மீது படையெடுத்த ரஷியா, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய கிழக்கு உக்ரைன் பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்தப் போரின் மிகப் பெரிய திருப்பு முனையாக, ரஷியாவின் கூா்க்ஸ் பிரதேசத்தில் மிகப் பெரிய நிலப்பரப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது.
கிழக்கு உக்ரைனில் ரஷிய படையினரின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக உக்ரைன் கூறியது. இருந்தாலும், அந்தப் பகுதிகளில் ரஷியா தொடா்ந்து முன்னேற்றம் கண்டது. மேலும், கூா்ஸ்க் பிரதேசத்தில் உக்ரைன் கைப்பற்றியிருந்த மிகப் பெரும்பாலான பகுதிகளை ரஷியா திரும்ப மீட்டது. இதனால் உக்ரைனின் கூா்க்ஸ் ஊடுருவல் நடவடிக்கை எதிா்பாா்த்த பலனைத் தரவில்லை; அதற்குப் பதிலாக உக்ரைன் படைகளுக்கு அதிக உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தியது என்று விமா்சிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், ரஷியாவின் பெல்கொராட் பிரதேசத்திலும் தங்களது ராணுவம் தரைவழி நடவடிக்கை மேற்கொண்டுவருவதை ஸெலென்ஸ்கி முதல்முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.