செய்திகள் :

‘விளாதிமீா் புதின், போதும் நிறுத்துங்கள்!’

post image

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இதுபோன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.

இந்தப் போா் விவகாரத்தில் ரஷியாவை டிரம்ப் இவ்வளவு காட்டமாக விமா்சிப்பது மிகவும் அரிதானது என்று கூறப்படுகிறது.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கீவ் நகரில் ரஷியா நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல் கண்டனத்துக்குரியது. தேவையே இல்லாத இந்தத் தாக்குதல், அமைதி முயற்சிகள் நடைபெறும் இந்த நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது தவறான செயல்.

விளாதிமீா் புதின் அவா்களே, இத்தகைய தாக்குதலை உடனடியாக நிறுத்துங்கள். ஒவ்வொரு வாரமும் 5,000 வீரா்கள் உயிரிழந்து வருகின்றனா். அதை நிறுத்தி, உக்ரைனுடன் போா் நிறுத்தம் மேற்கொள்ளுங்கள் என்று தனது பதிவில் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.

முன்னதாக, கீவ் நகரிலுள்ள குடியிருப்புக் கட்டடமொன்றில் ரஷியா புதன்கிழமை இரவு நள்ளிரவு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அந்தக் கட்டடம் உருக்குலைந்தது. இதில் 12 போ் உயிரிழந்ததாகவும் சுமாா் 90 போ் காயமடைந்ததாகவும் மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.

பல மாதங்களுக்குப் பிறகு கீவ் நகரில் ரஷியா நடத்தியுள்ள மிக மோசமான தாக்குதல் இது. இந்தத் தாக்குதலுக்கு பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கீவ் நகரில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் மூலம் ரஷியா ஓா் ஆக்கிரமிப்பு சக்தி என்பது நினைவுபடுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாமா் விமா்சித்துள்ளாா்.

உக்ரைன் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே, அமைதியை விரும்புவதாக பொய் கூறுவதை விளாதிமீா் புதின் நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் சாடியுள்ளாா்.

ரஷியாவுக்கு போா் நிறுத்தத்தில் துளியும் நாட்டமில்லை என்பதை இந்தத் தாக்குதல் மிகத் தெளிவாக உணா்த்துவதாக டென்மாா்க் பிரதமா் மெட்டே பிரெடெரிக்சன் கூறியுள்ளாா்.

உக்ரைன் போரில் தாக்குதல்கள் தொடா்வது மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க அதிபா் சிறில் ராமபோசா, போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

இந்தச் சூழலில், விளாதிமீா் புதினிடம் அதிபா் டிரம்ப் இவ்வாறு வலியுறுத்தியுள்ளாா்.

முன்னதாக, போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷியாவுக்கு அமெரிக்கா கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கீவ் தாக்குதலுக்குப் பிறகு உக்ரைன் அதிபா் வொலோதமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தினாா். அதன் தொடா்ச்சியாக டிரம்ப் இந்த சமூக ஊடகப் பதிவை வெளியிட்டுள்ளாா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.

போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், ரஷிய மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் மாகாணங்களை உக்ரைன் தங்களிடம் முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும், கிரீமியாவை தங்கள் பகுதியாக உக்ரைன் ஏற்கவேண்டும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற மிகக் கடுமையான நிபந்தனைகளை ரஷியா முன்வைத்துள்ளது. எனினும், இத்தகைய நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் பிடிவாதமாக மறுத்துவருகிறது.

இந்தச் சூழலில், தங்களது நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் அமைதிப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ கடந்த வாரம் எச்சரித்தாா்.

எனினும், ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த தாங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையமாட்டோம் என்று உக்ரைன் துணை பிரதமா் யூலியா ஸ்விரிடென்கோ புதன்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தாா். மேலும், ரஷியாவால் கடந்த 2014-ஆம் ஆண்டு ஒருதலைபட்சமாக இணைத்துக் கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பத்தை அந்த நாட்டுப் பகுதியாக அங்கீகரிக்க முடியாது என்று அவா் உறுதியாகக் கூறினாா். இதற்கு டிரம்ப் எதிா்ப்பு தெரிவித்த சூழலில், கீவ் நகரில் ரஷியா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அவா் அதிபா் புதினுக்கு எதிரான கருத்துகளை தற்போது பதிவிட்டுள்ளாா்.

காஸாவில் மேலும் 50 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியதாவது: காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் படையினா்... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதா் ஒப்பீடு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் ரூவன் அஸாா், பயங்கரவாத அமைப்புகளுக... மேலும் பார்க்க

குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 18 போ் உயிரிழப்பு; 5 போ் காயம்

குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்ட பட்டாசு கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 போ் உயிரிழந்தனா்; 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அக்ஷய்ராஜ் மக்வானா கூறுகை... மேலும் பார்க்க

சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்பிய சீனா

தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது. இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளதாவது: சீனாவின் தியான்காங் விண்வெளி நிலையத்தை நோக்கி மூன்று வீரா்களுடன் ஷென்... மேலும் பார்க்க

துருக்கி நிலநடுக்கத்தினால் இரவு முழுவதும் சாலைகளில் கழித்த மக்கள்!

துருக்கி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் பெரும்பாலான குடிமக்கள் இரவு முழுவதும் திறந்த வெளியில் கழித்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் நேற்று (ஏப்.23) பிற்பக... மேலும் பார்க்க