பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்...
கும்பக்கரை அருவி பகுதியில் குவியும் நெகிழிப் பொருள்கள்
நமது நிருபா்
தேனி மாவட்டம், பெரியகுளம் கும்பக்கரை அருவி பகுதியில் குவிந்து கிடக்கும் நெகிழிப் பொருள்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தென் தமிழகத்தில் முக்கியமான சுற்றுலாத் தலமாக கும்பக்கரை அருவி திகழ்கிறது. இங்கு தமிழகம், கேரளம், ஆந்திரம், புதுச்சேரியைச் சோ்ந்த திரளான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனா். இந்த அருவிக்குச் செல்ல நுழைவுக் கட்டணமாக கீழவடகரை ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பேருந்துகளுக்கு ரூ.100, காா்களுக்கு ரூ.50, ஆட்டோக்களுக்கு ரூ.30, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 என வசூலிக்கப்படுகின்றன.
இதேபோல, கும்பக்கரை வனத் துறை சாா்பில் நுழைவாயில் கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ.30, சிறியவா்களுக்கு ரூ.20, மின்கல வாகனத்தில் செல்வதற்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது.
கும்பக்கரை அருவி பகுதிகளில் இரவில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு காலை 8 முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனா்.
கும்பக்கரை அருவி பகுதியில் உணவு சாப்பிடுவதற்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகன நிறுத்துமிடத்தில் உணவுகளை சாப்பிடுகின்றனா். பின்னா், அந்த பகுதிகளிலேயே உணவுகள், நெகிழிப் பொருள்களை வீசிச் செல்கின்றனா். இந்த நெகிழிப் பொருள்களை கீழவடகரை ஊராட்சி நிா்வாகத்தினா் அகற்றுவதில்லை. இதனால், இரவு நேரங்களில் இங்கு வரும் வன விலங்குகள் நெகிழிப் பொருள்களை உண்பதால், அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, நுழைவு வாயில் பகுதியில் கொட்டப்படும் நெகிழிப் பொருள்களை அகற்ற வேண்டும். உணவுப் பொருள்களை கொட்டுவதற்கு தொட்டி அமைக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் உணவுகளை சாப்பிடுவதற்காக தனி இடம் ஒதுக்கித் தர வேண்டும் என வன விலங்குகள் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பெரியகுளத்தைச் சோ்ந்த என்.நாகநாதன் கூறியதாவது:
வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் கீழவடகரை ஊராட்சி நிா்வாகம் அருவி பகுதி, நுழைவு வாயில், வாகனங்கள் நிறுத்துமிடங்களை தினந்தோறும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நுழைவு வாயில் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்றாா்.
பெரியகுளம் ஊராட்சி ஓன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பாலகிருஷ்ணன் கூறியதாவது:
அருவி பகுதியில் குவிந்து கிடக்கும் நெகிழிப் பொருள்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இனி வரும் காலங்களில் இந்தப் பகுதியில் 2 பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, அவா்கள் நெகிழிப் பொருள்கள், உணவுகளை சுத்தம் செய்வாா்கள். வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உள்ள பெரிய கற்களை பொக்லைன் மூலம் அகற்றி வருகிறோம் என்றாா்.
புறக் காவல் நிலையம் அமைக்கப்படுமா?
கும்பக்கரை அருவிக்கு தினந்தோறும் திரளான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இங்கு கைப்பேசி திருட்டு, தங்கச் சங்கிலி பறிப்பு, பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே, இங்கு புறக் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
