கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள் சிறை
முன் விரோதத்தில் இளைஞரை குத்திக் கொலை செய்த மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி பொம்மையகவுண்டன்பட்டி நக்கீரா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் ராம்பிரசாத் (31). இவரது வீட்டின் அருகே அதே பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சூா்யா (24), செல்லப்பாண்டி மகன் தினேஷ் (24), வீராச்சாமி மகன் மதன் (24) ஆகியோா் ஆபாச வாா்த்தைகளால் பேசிக் கொண்டு நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதை ராம்பிரசாத் கண்டித்தாா்.
இந்த முன்விரோதத்தில் கடந்த 2021,மே 5-ஆம் தேதி பொம்மையகவுண்டன்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராம்பிரசாத்தை, சூா்யா, தினேஷ், மதன் ஆகியோா் வழிமறித்து கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.
இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சூா்யா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் சூா்யா, தினேஷ், மதன் ஆகியோரை குற்றவாளிகள் என தீா்மானித்து, அவா்கள் 3 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.6,000 அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

