செய்திகள் :

`StartUp' சாகசம் 21 : `இப்படித்தான் அமெரிக்காவில் நிறுவனத்தை விரிவுபடுத்தினோம்’ - இது `iCliniq’ கதை

post image

தொலைதூர மருத்துவம்: வாய்ப்புகளும் சவால்களும்

இன்றைய மருத்துவத் துறையில் தொலைதூர மருத்துவம் (Telemedicine) ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இதன் தேவை மிகவும் அதிகம். இந்தியாவில் நிலவும் முக்கிய பிரச்னை என்னவெனில், தனிநபர் அடிப்படையில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழ்நாட்டில் ஓரளவு சிறப்பான கட்டமைப்பு இருந்தாலும் எதிர்காலத்தில் இன்னமும் தேவை அதிகரிக்கலாம். சிறப்பு மருத்துவத் துறைகளில் இந்த இடைவெளி இன்னும் அதிகம். சிறுநீரக, இதய மற்றும் நுரையீரல் நோய்களுக்கான நிபுணர்கள், பெருநகரங்களில் மட்டுமே அதிகம் காணப்படுகின்றனர்.

தொலைதூர மருத்துவம் இந்த இடைவெளியை நிரப்ப உதவுகிறது. கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகள், பெருநகரங்களில் உள்ள நிபுணர்களின் ஆலோசனையைப் பெற இயலும். இதனால் நேரம், பணம் சேமிக்கப்படுவதோடு, சிகிச்சையின் தரமும் மேம்படுகிறது.

மருத்துவம்

ஆனால் இதில் சவால்களும் உள்ளன. இணைய இணைப்பு, டிஜிட்டல் கல்வியறிவு, தனியுரிமை பாதுகாப்பு போன்றவை கவனிக்கப்பட வேண்டும். அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து செயல்பட்டால், தொலைதூர மருத்துவம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இந்த சூழ்நிலையில் உலகம் முழுதும் சில கோடி மக்களுக்கு தொலைதூர மருத்துவத்தில் சிறப்பான சேவையை வழங்கிவரும் ஐகிளினிக் (iCliniq) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் துருவ் அவர்களுடன் இணைந்து அவவெளிநாடுகளில் வளர்ந்த கதையும் கேட்போம்...

`iCliniq தொடங்க எது ஊக்கமளித்தது? இதை ஆரம்பிக்க எந்தக் காரணம் உங்களை உந்தியது?’

``iCliniq என்பதை விட நான் ஒரு தொழில்முனைவோராக வளர விரும்பினேன். என் தாத்தா ஆரம்பித்த உலோக உருக்குக் கம்பெனியில்தான் அதிகமான நேரம் இருந்தேன். நட் போல்டுடன்தான் எனது சிறு வயது வாழ்க்கை ஆரம்பித்தது. கதிரவன் மோட்டார்ஸ், கதிரவன் இண்டஸ்ட்ரீஸ் 1980-களில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தமிழ்நாடு மட்டும் அல்லாமல் ஆந்திரா, கர்நாடகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் எனது அப்பாவுடன் நானும் அதிகமாக ஆந்திரா மற்றும் கர்நாடகத்திலும் சுற்றியிருக்கிறேன். நிறைய விவசாயிகள் நேரில் வந்து வாங்கிச் செல்வார்கள்.

ஆனால் எதிர்பாராத சில விஷயங்கள் குடும்பத்தில் சில பாதிப்பை ஏற்படுத்தின. கோவைக் குண்டுவெடிப்புக் காரணத்தினால் வெளியே இருந்து வாங்கிச் செல்பவர்கள் யாரும் வாங்க வரவில்லை. அதன்பின் எனது குடும்பத்தில் அப்பாவின் இழப்பு, இந்தக் காரணத்தால் குடும்பத்தொழில் அடிவாங்கியது. எவ்வளவு வளர்ச்சியைப் பார்த்தேனோ, அவ்வளவு வீழ்ச்சிகள், ஏளனங்கள் எல்லாவற்றையும் எதிர்கொண்டோம். இந்த நிலையில் அப்பாவின் தொழிலைச் செய்யலாம் என்றுதான் நானும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து வெளிவந்தேன். ஆனால், அடுத்து என்ன செய்வது என்று தோன்றியபோது எதுவும் பிடிபடவில்லை. மேல்படிப்புக்கும் முயற்சி செய்தேன்.

துருவ்
துருவ்

அதன் பின்னர் எனக்கு எது நன்றாக வரும் என்று மிகவும் யோசித்தபோது, எனது குணத்திற்கு எது தன்னியல்பாக வரும் என்று யோசித்து அதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு எது தன்னியல்பாக வரும் என்றால், மக்களுக்கு உதவி செய்வது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததை அறிந்தேன். ஆனால் எதில் செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

எதேச்சையாக எனது உறவினர் மருத்துவர் மதன்குமார் அவர்களோடு ஒரு திருமண நிகழ்ச்சியில் அடுத்து என்ன செய்யலாம் என்று நான் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் கொடுத்த ஐடியாதான், தொலைதூர மருத்துவத்தை (டெலிமெடிசனை) ஏன் தொழிலாக எடுத்துச் செய்யக்கூடாது, அதற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தோன்றிய ஒரு சிறிய பொறிதான் iCliniq. அதன் பின்னர் அவருடைய வழிகாட்டுதலில் என்னுடைய முயற்சியில் iCliniq பிறந்தது. எனக்கு இயல்பான குணம் பிறருக்கு உதவுவது. அதன் அடிப்படையிலும், எங்களது குடும்பம் ஒரு தொழில்முனைவோர் குடும்பம் என்பதாலும் எனக்கு இது சாத்தியமானது என்று நான் நினைக்கிறேன்.”

``iCliniq ஆரம்பிக்கும்போது என்ன மாதிரியான சிக்கல்களைச் சந்தித்தீர்கள்? நீங்கள் ஆரம்பித்த நேரத்தில் இணைய வேகம் வெகு குறைவு. அப்படியிருக்க, எப்படி டெலிமெடிசன் சாத்தியமானது? 2010, 2012ல் டெக்னாலஜி மிகவும் குறைவு. எப்படி வளர்ந்தீர்கள்?

``iCliniq என்பது டெலிமெடிசனுக்காக நாங்கள் உருவாக்கிய நிறுவனம். அதைக்கொண்டு மருத்துவர்களிடம் இரண்டாம் கருத்தும் வாங்கிக்கொள்ள முடியும். மேலும் தங்களது நோய் குறித்த ஆலோசனையைச் சிறப்பு மருத்துவர்களிடம் இருந்தும் கூட பெற்றுக்கொள்ளலாம். அதற்காகத்தான் 2010ல் நிறுவனம் தொடங்கி, 2012ல் எங்கள் iCliniq இணையத்தளம் வெளிவந்தது. ஆனால் அந்தச் சமயத்தில் இணையம் எங்களுக்கு மிகப்பெரிய சிக்கல். குறைவான இணைய வேகத்தில் வீடியோ அழைப்பு எல்லாம் சாத்தியம் வெகு குறைவாகவே இருந்தது. அது மட்டுமல்லாமல், டெலிமெடிசன் மொத்தமாக நமக்கு புதிதாக இருந்தது. இப்போது மருத்துவமனைகள் போன்று அப்போது இல்லை. இந்தியாவில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லாதபோது நாங்கள் எங்கள் வணிகத்தை இணையம் அதிகம் கிடைக்கும் நாடுகளுக்கு மாற்ற ஆரம்பித்தோம். இப்படித்தான் நாங்கள் அமெரிக்காவில் `iCliniq’ நிறுவனத்தை விரிவுபடுத்தினோம். என்ன ஒரு ஆதங்கம் என்றால், இன்றும் கூட தொலைதூர மருத்துவம் இந்தியாவில் பரவலாக்கப்படவில்லை. இங்கே சிறப்பு மருத்துவர்கள் எண்ணிக்கை வெகு குறைவு. ஆனால் அதிகரித்து வரும் நோய்களால் மருத்துவர் பற்றாக்குறை ஏற்படும்போது டெலிமெடிசனுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம்."

iCliniq
``நிறுவனம் ஆரம்பிக்கும்போது நிதி ஆதாரங்களை எப்படித் திரட்டினீர்கள்?"

``தொடக்க நிலையில் இருக்கும்போது எங்களது நிதி ஆதாரங்களுக்குச் சொந்தப் பணத்தை முதலீடு செய்தோம். முடிந்தவரை சிக்கனமாகச் செயல்பட்டோம். எங்களது விளம்பரங்களை நாங்கள் மிகவும் சிக்கனமாகவே செய்ய ஆரம்பித்தோம். முடிந்தவரை எல்லாச் செலவினங்களையும் குறைத்துக் கொண்டோம். ஆனால் விளம்பரப்படுத்துவதை நிறுத்தவில்லை. முதல் இரண்டு வருடம் நானே நேரடியாகச் சென்று மருத்துவர்களைச் சந்தித்து அவர்களை இணைக்க ஆரம்பித்தேன். முதல் சில வருடங்கள் செலவினங்களை எவ்வளவு கட்டுப்படுத்த முடியுமோ அவ்வளவு கட்டுப்படுத்தினோம். அதனால் ஆரம்ப நிலையில் முதலீடு இல்லாமல், இருக்கும் நிதியை வைத்து மேலாண்மை செய்யக் கற்றுக்கொண்டோம். நாங்கள் ஆரம்பித்தபோது, இப்போது உள்ளது மாதிரி ஸ்டார்ட்அப், முதலீட்டாளர்கள் என்ற கான்செப்ட் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், அதிகமாக அறிமுகமாகாத காலம்."

``தொடக்க நிலையில் உங்கள் iCliniq-ஐ மருத்துவர்கள் நம்பி இணைந்தார்களா?"

``தொடக்கக்கட்டத்தில் அந்தச் சிக்கல்கள் இருந்தன. சில மருத்துவர்களுக்குத் தொலைநோக்குப் பார்வை இருந்தது. இன்னமும் சிலருக்குப் பல முறை சொல்லிப் புரியவைத்தோம். இந்திய அளவில் எந்தெந்த மருத்துவர்கள் எல்லாம் தொழில்நுட்பப் பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய ஓர் ஆய்வு ஒன்றை நடத்தி, பல ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் இணைந்தது 3 பேர்தான். ஆசிஸ் எனும் மருத்துவர், ஆரம்பத்தில் இணைந்தவர்களில் ஒருவர், இன்றுவரை எங்களுடன் பயணிக்கிறார். அந்த 3 பேர் வழியாகவே இந்தியாவில் iCliniq மருத்துவர்களை ஒன்றிணைத்தோம். இயல்பாக டெலிமெடிசனில் இணைய ஆர்வம் இப்போதும் கூடக் குறைவுதான். ஆனால் விரைவில் எல்லா மருத்துவர்களும் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது."

மருத்துவர் மதன்குமார் உடன் துருவ்
மருத்துவர் மதன்குமார் உடன் துருவ்
``iCliniq எந்தெந்த நாடுகளில் எல்லாம் சேவைகளை வழங்கிவருகிறது? அங்கெல்லாம் எப்படி விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது? அங்கே சந்தித்த சிக்கல்கள் என்ன?"

``பல நாடுகளில் நாங்கள் சேவையை வழங்கி வந்தாலும், அமெரிக்காதான் எங்களது முக்கியச் சந்தை. இப்போதெல்லாம் 'நம் டார்கெட் கிளையன்ட் யார்?' என்ற கேள்வி எல்லா இடத்திலும் எழுகிறது. ஆனால் இந்தக் கேள்விக்கு முன்பே, நாங்கள் எங்கள் சந்தையை விரிவுப்படுத்த, இந்தியாவிலிருந்து எந்தெந்த நாடுகளுக்கு யார் எல்லாம் குடிபெயர்ந்துள்ளார்கள் என்று பார்த்தோம். அப்போதைய காலகட்டத்தில் கேரள, குஜராத்தியர், தெலுங்கர் எல்லோருமே அமெரிக்காவுக்குப் பெரும்பாலும் குடிபெயர்ந்தனர். அமெரிக்காவிலும் உடனே மருத்துவர்களை நீங்கள் பார்த்துவிட முடியாது. அதற்கும் மேல் சிறப்பு மருத்துவர் என்றால், நீங்கள் சில காலம் காத்திருந்த பின்னரே சந்திக்க முடியும். இந்தியாவில் உள்ளது போல் இல்லை.

அதனால் எங்களுக்குச் சந்தை இயல்பாகக் கிடைத்தது. இயல்பாக எல்லோரும் விரும்பும் சந்தையில்தான் நமக்குத் தொழில் பெருகும். ஒரு நாட்டில் கிடைத்த வரவேற்பு மற்றும் எங்களது சேவையைப் புரிந்த பின்னர், மற்ற நாடுகளில் உள்ள மக்களும் கேட்க ஆரம்பித்தனர். இப்படித்தான் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு நாங்கள் விரிவாக்கம் செய்தோம். செவ்வாய் கிரகத்தில் நிறைய பேர் டெலிமெடிசன் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சில கோரிக்கைகள் வந்திருந்தால், நிச்சயம் செவ்வாய் கிரகத்திற்கே சென்று விரிவாக்கம் செய்வேன்.”

``உலக அளவில் நீங்கள் விரிவாக்கம் செய்யும்போது ஏதேனும் யுக்திகளைக் கடைப்பிடிக்கிறீர்களா?”

``வாடிக்கையாளர் கருத்துக்களுக்கு எப்போதும் கவனம் கொடுக்க வேண்டும். அதில் அவர்களின் சிக்கல்கள் என்ன, தேவை என்ன? என்பன பற்றியெல்லாம் கருத்துக்கள் இருக்கும். அதை நாங்கள் உடனடியாகச் செயல்படுத்துவோம். எந்த ஒரு நிறுவனமும் தனது வாடிக்கையாளர் கருத்துக்களுக்குக் கவனம் செலுத்துகிறதோ, அந்த நிறுவனம் நிச்சயம் வெற்றியடையும் என்பது என் பார்வை.

இன்னொன்று, iCliniq தளத்தில் சாட்பாட் (Chatbot) ஒன்றைக் கொடுத்தோம். அதில் அவர்கள் வந்த உடன், அவர்கள் கேள்விக்கு ஏற்றவாறு பதில் அளிக்கும் வகையில் செய்தோம். எனவே இந்தியாவோ, இன்டர்நேஷனலோ, எந்த வணிகம் செய்தாலும் நாம் வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் நமது வணிகம் வெற்றியடையும். நம்ம மக்களுக்கு எப்போதுமே வைராக்கியம் அதிகம். எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் போய்ப் பார்க்கலாமே என்கிற வைராக்கியத்தில் நானும் போகிறேன்.”

``ஜென் AI வந்த பிறகு டெலிமெடிசன் துறைக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?”

``மொத்த இந்தியாவில், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு வெகு சிறப்பு. அதே சமயம், சிறப்பு மருத்துவர்களின் தேவை எல்லோருக்கும் இருக்கிறது. ஜெனரேட்டிவ் AI (Generative AI) எனப்படும் படைப்பாக்கச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, மருத்துவரின் நேரத்தை மிச்சப்படுத்தினால், அவரால் இன்னமும் பல நோயாளிகளைப் பார்க்க முடியும். iCliniq சேவையிலும் நாங்கள் ஜென் AI தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். எதிர்காலத்தில் டெலிமெடிசன் துறை எப்படிப் போகும் என்றால், நாம் அணிந்திருக்கும் கருவிகள் மூலம் கிடைக்கும் தரவுகளைச் செல்பேசியின் துணை கொண்டு பெற்று, ஜென் AI வழியே செயல்படுத்தி, நோயாளிகளுக்கு இன்னமும் தரமான சேவையை டெலிமெடிசன் வழியே வழங்கலாம்.

அதே சமயம், மருத்துவரை நேரில் சந்திக்க வாய்ப்பிருந்தால், அதைத்தான் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். டெலிமெடிசன் என்பது மருத்துவர்களுக்கு மாற்றானது அல்ல, மாறாக உடனடியாக மருத்துவர்களை அணுக முடியாதவர்களுக்கான வாய்ப்பு.”

iCliniq-இல் பல வகையான செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் உள்ளன.

https://ai.icliniq.com/ - இந்தத் தளத்தில், மருத்துவத்துறையில் உள்ள அனைவருக்கும் சேர்த்து, நாங்கள் செயற்கை நுண்ணறிவு கொண்டும் ஜென் AI பயன்படுத்தியும் மென்பொருள்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். உண்மையாகச் சொல்லப்போனால், இதை அணுகவே எங்கள் iCliniq இணையதளத்திற்கு வருடத்திற்கு 1.5 கோடிப் பார்வையாளர்கள் வருகின்றனர் என்றால், எங்கள் செயல்பாடுகளையும் திறன்களையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

https://ai.icliniq.com/tes - இந்தத் தளத்திற்குச் சென்று நீங்கள் பார்த்தால், அதில் உங்களுக்கு உங்கள் நோய் குறித்த இன்னமும் அதிகமான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். அதனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் iCliniq இப்போது இந்தியாவில் புற்றுநோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை கிடைக்க எம்எஸ்கே (Memorial Sloan Kettering Cancer Center) இணைந்து சென்னையிலிருந்தே எம்எஸ்கே நிபுணர்களின் ஆலோசனை மற்றும் சிகிச்சையை பெற முடியும். மேலும் தேவைப்பட்டால் நியூயார்க்கில் நேரடி சிகிச்சையும் பெறலாம். இதன் மூலம், இந்தியாவில் கிடைக்காத புதிய சிகிச்சை முறைகளையும் நோயாளிகள் அணுக முடியும் என்ற வசதியையும் ஐகிளினிக் ஏற்படுத்தியுள்ளது” என்கிறார்

-

உலகெங்கும் அதிகரித்து வரும் நோய் சிக்கல்களுக்கு, இப்போது உள்ள மருத்துவர்களைக் கொண்டு சேவை வழங்கினாலும், இன்னமும் பல மடங்கு தேவை அதிகரித்து வருகிறது. தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம், உலகம் முழுக்கப் பல கோடிப் பேருக்குத் தனது சேவையை வழங்கி வருவது நமக்கெல்லாம் பெருமையும் மகிழ்ச்சியும்.!

`StartUp' சாகசம் 20 : `உள்ளூரில் பெயரெடுத்தால், ஏற்றுமதி தானே நடக்கும்’ - இனியா ஆர்கானிக் மசாலா கதை!

இனியா ஆர்கானிக் மசாலா`StartUp' சாகசம் 20 :தமிழ்நாட்டின் சமையலறைகள் மசாலாப் பொருட்களின் நறுமணத்தால் எப்போதும் நிரம்பியிருக்கும். தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்த உணவுப் பழக்கத்தில், புதிய வணிக வாய்ப்ப... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 18 : `அலுவலகங்களுக்கு தினமும் ஃப்ரஷான ஸ்நாக்ஸ்’ - Snack Experts சாதித்தது எப்படி?

ஸ்நாக் எக்ஸ்பர்ட்ஸ்'StartUp' சாகசம் 18 இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தைகளில், நொறுக்குத்தீனி (Snacks) துறை மிக முக்கியமானது. மாறிவரும் வாழ்க்கை முறை, அதிகரிக்கும் வருமானம், நகரமயமாக்க... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 17 : `அம்மா உதவியுடன் தாவர நிறமேற்றிகள்’ - நெல்லை இளைஞரின் `Gusteau Foods’ கதை

'StartUp' சாகசம் 17 :உணவுப் பொருட்களில் வண்ணங்கள் சேர்ப்பது என்பது இன்று ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது. உணவுப் பொருட்களை கவர்ச்சிகரமாக மாற்றுவதிலும், விற்பனையைப் பெருக்குவதிலும் உணவு வண்ணங்கள் முக்கி... மேலும் பார்க்க