'StartUp' சாகசம் 18 : `அலுவலகங்களுக்கு தினமும் ஃப்ரஷான ஸ்நாக்ஸ்’ - Snack Experts சாதித்தது எப்படி?
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தைகளில், நொறுக்குத்தீனி (Snacks) துறை மிக முக்கியமானது. மாறிவரும் வாழ்க்கை முறை, அதிகரிக்கும் வருமானம், நகரமயமாக்கல் மற்றும் வசதிக்கான தேடல் போன்ற காரணிகளால், இந்திய நொறுக்குத்தீனி சந்தை ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த சந்தையில், பாரம்பரிய தின்பண்டங்கள் முதல் மேற்கத்திய சிப்ஸ் வரை பலதரப்பட்ட தயாரிப்புகள் உள்ளன.
இந்திய நொறுக்குத்தீனி சந்தை என்பது ஒழுங்கமைக்கப்பட்ட (Organized) மற்றும் ஒழுங்கமைக்கப்படாத (Unorganized) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்படாத பிரிவில் உள்ளூர் தின்பண்ட கடைகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், ஒழுங்கமைக்கப்பட்ட துறை பிராண்டட் தயாரிப்புகளின் மூலம் வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்திய சந்தையில் பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தீவிரமாகப் போட்டியிடுகின்றன. அவற்றில் சில முக்கிய நிறுவனங்கள்:

* ஹல்திராம்ஸ், பெப்சிகோ இந்தியா, ஐடிசி லிமிடெட், பாலாஜி வேஃபர்ஸ் , பிகானேர்வாலா, நம்மூர் அடையார் ஆனந்த பவன் (A2B), கிராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், கெவின்கேர் நிறுவனங்களும் இந்த போட்டியில் வலுவான சந்தையைக் கொண்டுள்ளன.
உலக அளவில் ஒரு இந்தியர் ஒரு வருடத்திற்கு சராசரியாக 2 முதல் 5 கிலோ நொறுக்குத்தீனிகள் எடுத்துக்கொள்வதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதிலும் வட இந்தியாவில்தான் அதிகமான நொறுக்குத்தீனிகள் விற்கப்படுகின்றன, தமிழர்களோடு ஒப்பிடுகையில் அவர்கள் நுகர்வு அதிகம்,
இந்த நொறுக்குத்தீனித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு நிறுவனம் தனக்கென ஒரு வழிமுறையைக் கொண்டுள்ளது. அதில் தங்களுக்கென ஒரு சந்தையை தாமே உருவாக்கியும் உள்ளது , இந்த வாரம் அந்த நிறுவனத்தைத்தான் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
`ஸ்நாக் எக்ஸ்பர்ட்ஸ்’ எனும் நிறுவனம்தான் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அலுவலகங்களுக்கு மட்டும் விநியோகம் செய்யும் நொறுக்குத்தீனிகளை விநியோகம் செய்தும் பல புதுமைகளை புகுத்தியும் வந்துள்ளது, அதன் நிறுவனரான திரு.அருள் முருகன் அவர்களுடனான நேர்க்காணல் இதோ...
``ஸ்நாக் எக்ஸ்பர்ட்ஸ் தொடங்க உங்களுக்கு எது உத்வேகம் அளித்தது... உங்கள் தயாரிப்பு மேம்பாட்டிற்கு வழிகாட்டும் ஆரோக்கியமான உணவு குறித்த உங்கள் முக்கிய தத்துவம் என்ன?"
``நான் படித்தது மற்றும் வேலை பார்த்தது அனைத்துமே வேளாண் கல்லூரியில் தோட்டக்கலைத்துறை. கல்வி முடிச்சதிலிருந்து உணவு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றினது வரைக்கும் எட்டு ஆண்டுகள் 100% உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்ததேன். அங்கு பணி புரிந்ததால் உணவு சார்ந்த தொழில் குறித்த ஒரு அடிப்படை புரிதல் கிடைத்தது. இந்த அனுபவங்களே உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில் ஆரம்பிக்கணும் அப்படிங்கறதுக்கு ஒரு அடிப்படையான உத்வேகமா இருந்தது.
ஆரோக்கியமான உணவு குறித்த முக்கிய பொதுவான தத்துவம் என்னவென்றால், எந்த உணவுப்பொருள் வாழ்நாள் காலம் மிக குறைவாக இருக்கிறதோ... அது ஆரோக்கியமானது. எந்த அளவுக்கு உணவுப்பொருளின் வாழ்நாளை அதிகப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நாம் இயற்கைக்கு மாறான செயற்கை நிறமூட்டிகளோ, வேதிப்பொருட்களோ அல்லது பதிப்படுத்திகளோ சேர்த்து தான் உணவுப்பொருளை உருவாக்கவேண்டியதிருக்கிறது.
அதனால் ஆரோக்கியமான உணவுப்பொருள் என்பது மூலப்பொருள், பின் அந்த உணவு தயாரிப்பது முதல், அது நுகர்வோரை சேரும் இடைவெளி எந்த அளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் உருவாக்கும் உணவுப் பொருள் ஆரோக்கியமானது என்ற எண்ணம் தோன்றியது.
உதாரணத்திற்கு நேற்று சமைத்து இன்று சாப்பிடுகிறோம், இன்று சமைத்து நாளை சாப்பிடுகிறோம். 6 மாசம் கெட்டுப்போகாமா இருக்கிறத விட 4 மாசம் கெட்டுப்போகாமாக இருக்கிறது நல்லது. 4 மாசம் கெட்டுப்போகாமாக இருக்கிறத விட 2 மாசம் கெட்டுப்போகாம இருக்கிறது நல்லது. 2 மாசம் கெட்டுப்போகாமாக இருக்கிறத விட 1 மாசம் கெட்டுப்போகாமாக இருக்கிறது நல்லது. 1 மாசம் கெட்டுப்போகாமாக இருக்கிற விட 15 நாள் கெட்டுப்போகாம இருக்கிறது நல்லது. 15 நாளை விட 5 நாள் கெட்டுப்போகமாக இருக்கிறது நல்லது.
இப்படி தயாரிப்பு தேதிக்கும் நுகர்வு தேதி எவ்வளவு இடைவெளி குறைவோ, தயாரிப்பு தேதிக்கும், எக்ஸ்பயரரி தேதிக்கும் குறைவான தேதி இருக்கிறதோ அவ்வளவு நல்லது. இந்த உணவுகளில் பதப்படுத்தும் வேதிப்பொருட்கள் போடும் வாய்ப்பு இல்லை, அல்லது மிக குறைவு.
ஆரோக்கியமான உணவு என்பதை பிரஷ்ஷானா உணவு, அதாவது, மூலப்பொருள் பெருவதிலிருந்து, முழுமையான உணவுப்பொருள்.... முழுமையான உணவுப்பொருளில் இருந்து நுகர்வோரை அடையும் இடைவெளி... இதெல்லாம் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவு ஆரோக்கியமானது என்பது என் கருத்து.
இதைத்தான் ஸ்நாக் எக்ஸ்பர்ட்சில் செய்கிறோம். ஸ்நாக் எக்ஸ்பர்ட்ஸ் என்பது அலுவலங்களுக்கான தின்பண்டங்களை உருவாக்கும் நிறுவனம். ஒரே மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போரடிக்கும் நிறுவனங்களுக்கு, 100 க்கும் மேற்பட்ட ரகங்களுடன், நிறுவனத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில், தினசரி ஃப்ரெஷ் நொறுக்குத்தீனி வழங்கும் நிறுவனம்
20 பேர் முதல் 5000 பேர் வரை உள்ள நிறுவனங்கள் எங்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இன்று 100 பேர் வருகிறார்கள் , 30 நாளும் 100 பேர் என்றால் நுகர்வுகளை எளிதாக முன்கூட்டியே திட்டமிடலாம். முன்கூட்டியே திட்டமிடக்கூடிய இடங்களில் வேதிப்பொருட்களோ, செயற்கை நிறமூட்டிகளோ பயன்படுத்தவேண்டிய அவசியம் இராது. முன்கூட்டி திட்டமிட முடியாத இடங்களில் அதன் வாழ்நாளை நீட்டிக்க பலவிதமான செயற்கை நிறமூட்டிகள், வேதிப்பொருட்கள் ஆகியவை பயன்படுத்தப்படும் தேவை எழுகிறது.
இதனால் ஸ்நாக் எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனத்தின் தத்துவம் என்பது மேலே சொன்னதுதான். எவ்வளவு முன்கூட்டி திட்டமிட்டு பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு எந்த உணவுப்பொருளுக்கும் நாம் நிறமூட்டிகளை, பதபடுத்திகளை சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை . இதுதான் ஆரோக்கியமான உணவுப்பொருளை வழங்கும் எங்கள் நிறுவனத்தின் முக்கியத்துவம் என்று நான் நினைக்கிறேன்.”
``உங்கள் மூலப்பொருள் ஆதார மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு செயல்முறையை விளக்க முடியுமா, சந்தையில் உள்ள மற்றவற்றுடன் ஒப்பிடும்போது ஸ்நாக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் தின்பண்டங்களை தனித்துவமாக்குவது எது?”
``தயாரிப்பு மேம்பாட்டு செயல்முறைகள், அப்படிங்கறது முன்கூட்டியே திட்டமிடுறோம். அதாவது இன்னைக்கு ஒரு நூறு நிறுவனங்களுக்கு நாங்கள் ஸ்நாக்ஸ் விநியோகம் செய்யவேண்டும் என்றால், அந்த நிறுவனங்களுக்கு அடுத்த மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரைக்கும் எவ்வளவு எவ்வளவு ஸ்நாக்ஸ் தேவைப்படும், அப்படிங்கிறத முன்கூட்டியே என்ன என்ன ஸ்நாக்ஸ் வேண்டும் என்று முடிவு செய்து அவர்களுக்கு விநியோகம் செய்யும் இரண்டு நாட்களுக்கு முன்னாடி தான் தயாரிக்கிறோம்.
இதை எங்களின் அங்கிகரிக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ஒருவேளை எங்கள் தரக்கொள்கைகளின் அடிப்படையில் அந்த ஸ்நாக்ஸ் இல்லை என்றால் திருப்பி அனுப்புறோம், தரம் சார்ந்த கொள்கைகளில் அது தேர்வாகும்போது அதை எடுத்து பேக் பண்ணி கொடுக்கிறோம் . எப்போதுமே மூலப்பொருள் சார்ந்து திட்டமிடுவதை விட நுகர்வோர் சார்ந்து திட்டமிடுவது அவசியம்.
ஸ்நாஸ்க்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை நாம் அவ்வப்பது தணிக்கை செய்கின்றோம். அவர்கள் உருவாக்கி எங்கள் நிறுவனத்திற்கு அனுப்பும் போது அக்செப்டென்ஸ் குவாலிட்டி என்ற தரக்கொள்கையில் அவர்கள் தேர்வாகவேண்டும். அப்படி தேர்வானால் மட்டுமே பணம் அவர்களுக்கு அனுப்பப்படும். அப்போதுதான் அது எங்கள் நுகர்வோர் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். எங்கள் தரக்கொள்கைகளால் மட்டுமே இன்றுவரை நாங்கள் நீடித்து நிற்கின்றோம். இதனால் எங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த குறைகளும் எங்களுக்கு வந்ததில்லை. ஏனெனின் உற்பத்தியாளர்களோடு எங்களுக்கு இருக்கும் தரக்கொள்கை, அது சார்ந்த மேலாண்மை மேலும் உணவு பாதுகாப்பு சட்டப்படி நாங்கள் செயல்படுகிறோம்.
இது சொல்வது எளிது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் தரக்கொள்கை படிப்படியாக மேம்படுத்திவருகிறோம்.”

``உங்கள் தின்பண்டங்களில் சுவை மற்றும் ஆரோக்கியத்தை எவ்வாறு சமநிலைப்படுத்துகிறீர்கள்? அதில் ஏதேனும் நுட்பங்களை பயன்படுத்துகின்றீர்களா?”
``நாம் ஏன் உணவுப்பொருட்களில் வேதிப்பொருட்களை கலந்து அதன் ஆயுளை நீடிக்கவேண்டும்?
நமக்குத்தான் தெரிகிறதே, இன்று இத்தனைப் பேருக்குத்தான் விநியோகம் செய்யவேண்டும் என்ற கணக்கு இருக்கும்போது எதற்கு ஆதன் ஆயுளை சில மாதங்கள் நீடிக்கவேண்டும். அதன் இயல்பான காலத்திலேயே பயன்படுத்தலாமே?
உதாரணத்திற்கு வெவ்வேறு இடத்தில் இருந்து பெறப்படும் நொறுக்குதீனிகளுக்கு ஒரே சுவையை கொடுக்க சமநிலைபடுத்துவ வேண்டும், அப்படின்னா நடுவுல நம்ம ஏதோ ஒரு பொருள் சேர்த்தாக வேண்டிய சூழ்நிலை இருக்கு. அந்த பொருள்தான் இன்னைக்கு உணவு சார்ந்த தொழில் துறைகளில் வேதிப்பொருள்களாக பயன்படுத்தப்படுகிறது.
உதாரணத்திற்கு இனிப்பைக் குறைத்து உப்புச் சுவையை கூட்டவேண்டும் எனில் அதற்கு ஒரு வேதிப்பொருள், இனிப்பைக்கூட்ட அதற்கு ஒரு வேதிப்பொருள். இந்த செயல்முறைகளை ஸ்நாக் எக்ஸ்பர்ட் செய்வதில்லை. தேவைக்கு தகுந்த மாதிரிதான் நாங்கள் நொறுக்குத்தீனியை உருவாக்குகின்றோம்.
அதேபோல் எங்களுடைய மூலப்பொருட்கள் காலநிலைக்கு ஏற்ப மாறி மாறி கிடைக்கும்.எல்லா காலங்களிலும் கிடைக்கும் ராகி ஒரே மாதிரி இருக்கப்போவதில்லை.
எங்களால் முடிந்த அளவுக்கு செயல்முறைகள் வழியாக தரக்கட்டுப்பாடுகளை நாங்கள் செய்துவிடுகிறோம். ஆனால் மூலப்பொருட்களால் ஏற்படும் சில சமமற்ற சுவை இருக்கும். அதனை நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு சொல்லிவிடுகிறோம்.
ஏனெனில் மூலப்பொருட்களில் ஒரே சுவையை அதிகரிக்க சில பொருட்களை குறைக்க ஓரு வேதிப்பொருள், இன்னொரு சுவையை கூட்டி இன்னொரு வேதிப்பொருள் என்று மாறிமாறிவரும். இதை நாங்கள் செய்வதில்லை. கண்டிப்பாக எங்கள் உணவுப்பொருகளில் சுவை சார்ந்த மாறுபாடுகள் அதன் மூலப்பொருள்களால் வருவதை நாங்கள் எங்கள் தெளிவாக சொல்லிவிடுகின்றோம்.

``இன்று எல்லாருமே இணைய வழிதான் வர்த்தகம் என்கிறார்கள். உங்கள் பார்வை என்ன? உங்கள் மொத்த வணிகத்தில் இணைய வர்த்தகம் எவ்வளவு? நேரடி வர்த்தகம் எவ்வளவு? இரண்டிலும் விற்பனைக்கான உங்கள் உத்திகள் என்ன?”
``இணைய வழி வர்த்தகம் அப்படிங்கறது, உணவு சார்ந்த தொழிலுக்கு ஏற்றதானு தெரியல. ஏன்னா நமக்கு இருக்கிற மொத்த லாபமா இருந்தாலும் சரி, நிகர லாபமா இருந்தாலும் சரி, நம்முடைய பொறுப்பில் இருக்கும் விலையா இருந்தாலும் சரி, இது மூன்றுமே கம்மி. ஒரு கிலோ பொருள் அப்படிங்கறது 300 ரூபாய் இருக்கும் என்றால், நம்மளுடைய நிகர லாபம் 30 ரூபாயக்கத்தான் இருக்கும்.
இந்த மாதிரி சூழ்நிலைகளில் உணவு சார்ந்த பொருட்களுக்கு என்ன பொருத்தவரைக்கும்இணையவழி கொஞ்சம் கஷ்டம் தான். போக்குவரத்து செலவு அதிகமாக இருக்கும். கரூரில் இருந்து தர்மபுரியில் இருந்து இந்தியா முழுதும் அனுப்ப வேண்டுமென்றால் அதை கொண்டுபோய் சேர்க்கும் செலவு மிக அதிகம். வாடிக்கையாளர்களுக்கு அதிகமான செலவில் கொண்டுபோய் சேர்ப்பதால் விலை அதிகமாகும்.
இன்னொரு புறம் மார்கெட் பிளேஸ் நிறுவனங்கள் எனப்படும் அமேசான், பிளிப்கார்ட் மாதிரி நிறுவனங்களில் பதிவு செய்து விற்கும்போது அவர்கள் வாங்கும் விற்பனை கமிசன் 25% முதல் 30 % அதிகம், அதனால் உணவு சார்ந்த நிறுவனங்கள் இணையத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு என்பது எனது கருத்து.
அதே சமயம் இன்று விரைவு வணிகம் என்று சொல்லப்படும் `Q காமர்ஸ் விநியோகம், B2B, D2C க்கு நன்றாக வாய்ப்பு இருக்கு, பொதுவாக உணவுக்கு மட்டுமே ஆரம்பிக்கப்படும் பல நிறுவனங்கள் தடுமாறுகிறார்கள், ஆம்னிசானல் எனப்படும் அனைத்து வகையான விநியோகத்திலிருபவர்கள் integeratrd model என்பது நேரடியாக விற்கும்போதும், இணையம் வழியாக விற்கும்போதும், மார்க்கெட் பிளேஸ் வழியாக விற்கும்போது இது சாதகமாக உள்ளது, மொத்த வணிகமுமே இணையம் என்றால் நிச்சயம் லாபம் இருக்காது, ஆனால் 200 ரூபாய் பொருளை 600 முதல் 800 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என்றால் நிச்சயம் அங்கே பெரும் வாய்ப்புபிருக்கிறது. ஆனால் அது எல்லா பொருளுக்கும் பொருந்தாது. இணையச்சந்தை சந்தை இன்னமும் வளர்ந்துகொண்டே இருக்கிறது, இது இப்போது துவக்கநிலையில் இருக்கிறது.
விநியோகம், உற்பத்தி, பேக்கேஜ் , இணைய வணிகத்தில் பங்காற்றும் ஒவ்வொருவரும் அதிகப்படியான போட்டிகள் இருக்கும்போது, நாமும் திறமையாக பெருக்கிக்கொள்ள வேண்டும். அப்போது தான் சந்தையில் நீடித்து நிற்க முடியும்,
என்னை பொறுத்தவரை இணைய வணிகத்திற்கு பயங்கர போட்டி இருக்கின்றது. அதுவும் மொத்த வணிகத்தில் இணைய வணிகம் 10% தான்... மீதம் 90% போட்டியை விட இந்த 10% நடக்கும் போட்டி மிக அதிகம்.
இது வளரக்கூடிய சந்தை என்பதால் போட்டி அதிகமாக இருக்கலாம். ஆனால் 90% வணிகம் நடக்கும் அந்த இணையமில்லாத, நாம் நேரடியாக கடைகளில் சென்று வாங்கும் அந்த வணிகத்தில் வாய்ப்புகள் மிக அதிகம்”
``உங்கள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது நீங்கள் சந்தித்த சிக்கல்கள் என்ன ? அதை எவ்வாறு சமாளித்தீர்கள்?”
``எங்கள் நிறுவனம் ஆரம்பித்து 10 வருடங்களாகிவிட்டது. 2015ல் ஆரம்பித்தோம். அன்று Subscriptions commerce என்று சொல்லும் இணைய வணிகத்தில் சந்தா முறையில் ஆரம்பித்தோம் . இந்தியாவில் அதற்கான சூழ்நிலை இல்லாதபோதே நாங்கள் ஆரம்பித்தோம்
அதன்பின் Subscriptions commerce போதுமான வாடிக்கையாளர்கள் இல்லாததால் அதை நிப்பாட்டும் சூழல் ஏற்பட்டது.
பி2பி-ல் நிறுவனங்களுக்கு மட்டும் சப்ளை செய்யலாம் என்று யோசித்தபோதது ஒரு சிக்லலான முடிவுகளாக இருந்தது. ஏனெனில் இது ஒழுங்கு செய்யப்படாத அமைப்பாக இருந்தது. ஆனால் பணமதிப்பிழப்பின்போது , ஜிஎஸ்டியில் போதும் எல்லாமே டிஜிட்டலுக்கு மாறியபோது இது எங்களுக்கு வளர்ச்சியை கொடுத்தது.
கோவிட் மாதிரியான சூழலில் எங்கள் தொழில் முடங்கியது. எங்கள் நிறுவனம் அலுவலகங்களுக்கு ஸ்நாக்ஸ் கொடுக்கும் நிறுவனம், அலுவலகம் இயங்கினால்தானே ஸ்நாக்ஸ் கொடுக்க முடியும். கொரோனா நேரத்தில் எல்லாமே வீட்டிலிருந்து பணியாற்றியதால் எங்களுக்கு பெரும் இழப்பு, ஏறக்குறைய நான்கு வருடங்களாக அதிலிருந்து இப்போதுவரை நாங்கள் வெளிவர முயன்றுகொண்டிருக்கிறோம்.
ஆனால் 2025 லிருந்து நாங்கள் நல்ல வளர்ச்சியை பெறுவோம் என்று நம்புகின்றோம்”

``ஸ்நாக் எக்ஸ்பர்ட்ஸின் எதிர்காலத்திற்கான உங்கள் பார்வை என்ன, மேலும் உணவு தொழில்முனைவோராக விரும்பும் நபர்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை வழங்குவீர்கள்?”
``நொறுக்குத்தீனிகளுக்கான சந்தையின் எதிர்காலம்தொடர்ந்து விரிவடைந்துவருகின்றது, அதிலும் தொடர்ந்து பல புதிய முயற்சிகளையும் செய்து வருகின்றோம். முழுதாக பி2பிக்கு மட்டுமே வழங்குவலிருந்து நுகர்வோர் சார்ந்து புதிய உணவுப்பொருட்களை அறிமுகம் செய்யலாம் என்று முயற்சி செய்து வருகின்றோம், அது என்படி செல்கிறது என்று பார்க்கவேண்டும். பத்தாண்டுகளை கடந்துவிட்டோம். அடுத்த 10 ஆண்டுகளில் இன்னமும் நல்ல நிலையை அடைவோம்.
சக தொழில்முனைவோர்களுக்கு நாங்கள் சொல்வது, உணவுத்தொழில் என்பது தொடங்குவது எளிமையானது. ஆனால் நடத்துவதற்கு கடினமானது.
உணவுத்தொழிலில் உங்கள் நிகர லாபம் மிகக்குறைவு. அதனால சந்தையில் செயல்படும் மற்ற பேஷன், டெக்ஸ்டைல்ஸ் , காஸ்மெடிக் நிறுவனங்களைப் பார்த்து நாம் சந்தைப்படுத்தக்கூடாது, அவர்கள் செய்யும் செலவுகளை நாமும் அப்படியே செய்ய முடியாது .உங்களுக்கு என்று தனி பாதை உருவாக்கிக்கொள்ளுங்கள், உங்களுக்கென்று நுகர்வு சார்ந்த சந்தையை உருவாக்கிக்கொள்ளுங்கள், குறைந்த பட்சம் உங்கள் பொருள் விநியோகத்தில் 30-40% நீங்கள் மேலாண்மை செய்யுங்கள்.
இவைகள் எதிர்காலத்தில் உங்கள் தொழிலை வலுப்படுத்த மிக உதவியாக இருக்கும்.”
``ஸ்நாக் எக்ஸ்பர்ட்ஸை உருவாக்குவதில் மிகவும் பலனளிக்கும் பகுதி... காரமா? இனிப்பா அல்லது எது? உங்கள் நிறுவனத்தில் உங்களுக்கு பிடித்த தனிப்பட்ட தயாரிப்பு எது?”
``மத்த நிறுவனங்கள் மாதிரி ஒரு ஒரு சிக்னேச்சர் ப்ராடக்ட் அப்படிங்கிறதெல்லாம் நமக்கு எதுவும் கிடையாது, ஏன் அப்படின்னா இங்க வாடிக்கையாளர் அப்படிங்கிறவங்க எந்த ஒரு தனிப்பட்ட ஒரு நொறுக்கு தீனிக்காகவும் நம்மகிட்ட வர்றது கிடையாது, நம்ம கிட்ட வர்றது ஒரு பண்டில் ஆப் சர்வீஸ்.
ஒரு முறை கொடுக்கும் நொறுக்குத்தீனி மீண்டும் அவர்களுக்கு 60 நாட்கள் கழித்தே அவர்களுக்குப் போகும்.
அலுவலகத்தில் வழங்கக்கூடிய நொறுக்குத்தீனி அவர்களுக்கு சலித்துவிடக்கூடாது , அதனால் எங்கள் நிறுவனத்தின் வழியே வழங்கப்படும் நொறுக்குத்தீனிகள் மீண்டும் 60 நாளுக்கு பின்னர்தான் வழங்கப்படும் என நாங்கள் நிறுவனங்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதியை வைத்தே எங்கள் ஆராய்ச்சியை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
அதேபோல் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் தொடர்ச்சியாக கருத்துக்களைப் பெற்று வருகிறோம்.
அதிலிருந்து அதிகமா எது பிடிக்கவில்லை என்பதை நாங்கள் தொடர்ந்து ஆராந்து, அதை தவிர்த்துவிடுகிறோம், எல்லாருமே பிடிச்சப் பொருளை மீண்டும் மீண்டும் சாப்பிடும்போது அவை சலித்துவிடும் என்பதையும் நாங்கள் கவனத்தில் வைக்கிறோம்.
இதனால் எங்கள் நிறுவனத்தில் காரமா? இனிப்பா என்றெல்லாம் கணிக்க முடியாது, எங்கள் நோக்கம் நுகர்வோருக்கு எது பிடிச்சிருக்கு எது பிடிக்கலை, நுகர்வோருக்கு பிடிக்காததை அவர்களுக்கு கொடுக்கக்கூடாது அவ்வளவே இந்த கொள்கைதான் எங்களுக்குப் பிடித்தது
``ஒட்டுமொத்த திண்பண்டம் மற்றும் நொறுக்குத்தீனி வர்த்தகத்தில் வட இந்திய நிறுவனங்களின் விற்பனை அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் விளையும் உணவுப்பொருட்களில் இருந்து உருவாக்கும் நொறுக்குத்தீனிகள் மற்றும் தின்பண்டங்களின் சந்தை பங்களிப்பு மிக குறைவாக இருக்கிறது என்பது இணையத்திலிருந்து கிடைத்த தகவலின் தொகுப்பு. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? இதை எப்படி அதிகப்படுத்தலாம்?
``இணையத்தில் மட்டுமல்ல களத்திலும் நீங்கள் சொல்லும் செய்தி உண்மைதான். வட இந்தியாவில் நொறுக்குத்தீனி சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை மிக அதிகம் , ஏனெனில் தனிநபர் சாப்பிடும் நொறுக்குத் தீனியின் அளவும் அதிகம் என்பதால் அவர்களுக்கு இயல்பாகவே மிகப்பெரிய சந்தை இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு நாள் எண்ணெய் பலகாரம் சாப்பிட்டாலே அதற்கு அடுத்த நாள் எண்ணெய் பலகாரம் நமக்கு திரும்பத் தர மாட்டார்கள், ஏனெனில் இயல்பாகவே ஆரோக்கியம் குறித்த அக்கறை நம்மவர்களுக்கு மிக அதிகம்.
ஆனாலும் நம் மக்கள் இரண்டு வேளை உணவு ஒரு வேளை நொறுக்கு தீனி என்ற திட்டத்திற்கு கொஞ்சமாக மாறி வருகிறார்கள். இந்த நிலையில் நமக்கும் வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளது.
வட இந்தியாவில் போட்டி அதிகம். அதனால் வளர்ச்சி குறைவு, ஆனால் தமிழ்நாட்டில் போட்டியா குறைவு, ஆனால் வெகு வேகமாக வளரும் சந்தை.
எனவே தமிழ்நாட்டிற்கு ஆரோக்கியமான நொறுக்கு தீனிகள் மிக அதிகமான தேவை உள்ளது. எனவே இதை நன்றாக பயன்படுத்திய ஒவ்வொருவரும் எவ்வளவு வித்தியாசம் காட்ட முடியுமோ அவ்வளவு வித்தியாசம் காட்டினால் இந்த சந்தையில் நம் பங்கை அதிகப்படுத்த முடியும்.
ஏற்கனவே சொன்னது தான், திரும்பவும் சொல்கிறேன்... வடநாட்டில் போட்டி அதிகம், வளர்ச்சி குறைவு, தமிழ்நாட்டில் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகம். எனவே சரியாக இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.”
தமிழகத்தில் பொதுவாகவே ஒரு கருத்து உண்டு எதை செய்தாலும் ஒரே துறையில் அதன் அடியாளத்தை காண வேண்டும்.
அருள்முருகன் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார், நொறுக்குத்தீனி துறையில் எவ்வளவு செய்ய முடியுமோ, அவ்வளவு விஷயங்களை அவர் செய்து, அதற்காக நிறைய ஆராய்ந்து அவர்களுக்கென ஒரு தனி தரக்கொள்கையை உருவாக்கி செயல்படுத்தி அதை பிறருக்கும் சொல்லிக்கொடுத்தும் வருகிறார்.
அவருக்கு நம் வாழ்த்து!