செய்திகள் :

'StartUp' சாகசம் 16 : வணிகத்துக்கு தொழில்நுட்பம் அவசியம்! - `டிஜிட்ஆல்’ செய்வது என்ன?

post image

வணிக சங்கம் என்பது தொழில் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து தங்கள் வணிகங்களை வளர்க்க உதவும் அமைப்பாகும். அப்படிப்பட்ட அமைப்புகள் தமிழகத்தில் இருந்தாலும் 100 ஆண்டுகள் கடந்த சில வணிக அமைப்புகளில் தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பு எனும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் இந்தியாவின் இரண்டாவது தொழில் சங்கமாகும். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு ஏறக்குறைய 24 உறுப்பினர்களுடன் 1924 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 101 ஆண்டுகளில் இந்த அமைப்பில் 7000 பேருக்கு மேல் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்புகளில் இருந்து பல உபக்குழுக்கள் துவக்கப்பட்டு அவை இன்று தமிழகம் அல்லாமல் பல தமிழ் பேசும் நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பில் இருந்து உருவாக்கப்பட்டதுதான் யெஸ் எனும் `யங் என்டர்பிரனர்ஸ் ஸ்கூல்' எனும் இளம் தொழில்முனைவோர் மையம். தமிழ்நாடு முழுதும் 30 இடங்களில் அமைக்கப்பட்டு வணிகர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தயாராக்கி வருகிறது.

Export Promotion Centre (EPC) எனும் அமைப்பு வழியே ஏற்றுமதியாளர்களுக்கு வழிகாட்டுகிறது. டிஜிட்ஆல் எனும் அமைப்பு வழியே இன்று மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுதும் உள்ள தொழில்நுட்ப மேம்பாடுகளையும், பயிற்சிகளையும் நடத்தி தொழில் முனைவு மட்டுமல்லாது சாதாரண மக்களுக்கும் தொழில்நுட்ப விழிப்புணர்வையும், பயிற்சிப்பட்டறைகளையும் நடத்திவருகிறது.

இன்று நாம் பார்க்க விரும்புவதும் டிஜிட்டால் அமைப்பு பற்றிதான்.

பொதுவாக எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் கொள்கையை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்டிருக்கும். அப்படி வளர்ந்துவரும் தொழில்நுட்பம் அனைவருக்கும் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் டிஜிட்ஆல் அமைப்பு. இதன் தலைவர் ஜே.கே. முத்து அவர்களிடம் டிஜிட் ஆல் அமைப்பு, அதன் நோக்கம், செயல்பாடு பற்றிய நேர்காணல் இதோ:

``பொதுவாக ஒரு அமைப்பு வணிகர்கள் சந்திக்கவும், பேசவும், கூட்டு செயல்பாடுகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகளை உருவாக்க ஆரம்பிக்கப்பட்டிருக்கும். இங்கே டிஜிட்ஆல் துவங்க எந்த காரணம் உங்களை உந்தியது?“


``தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தில் நான் உறுப்பினராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நிறைய தொழில்நுட்பம் சார்ந்து செயல்படுபவன். அதனால் மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை நடத்தி வந்தேன். இதனால் தொழில்நுட்பம் சார்ந்த எந்த சந்தேகம், ஆலோசனை என்னிடத்தில் கேட்பார்கள். அப்படியிருந்தபோதுதான் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.எஸ்.ரத்தினவேல் அவர்கள் தொழில்நுட்பம் சொல்லித்தருவதற்காக தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஏனெனில் தொழில்முனைவோர்களுக்கும் வரும் காலங்களில் தொழில்நுட்பம் அவசியம், இல்லையெனில் நிறைய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என அவர் வலியுறுத்திய பின்னர் ஆரம்பிக்கப்பட்டதுதான் டிஜிட் ஆல். எண்ணியம் அனைவருக்கும் என்ற இலக்கைக் கொண்டு 2015ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களைக் கொண்டு ஆரம்பித்தோம்.

இன்று சங்கமம் என்ற தொழில்நுட்ப மாநாடுகளை, இதுவரை 7 முறை நடத்தியுள்ளோம். `கலாம் டிஜிட்ஆல் விலேஜ்’ என்ற துணை அமைப்பை உருவாக்கி, அதன் வழியே கிராமத்தில் உள்ள மாணவ/மாணவியர்களுக்கும் தொழில்நுட்ப பயிற்சிகளை கொடுத்து வருகின்றோம். பொதுமக்களுக்கும் நாங்கள் தொழில்நுட்ப பயிற்சி அளித்து வருகின்றோம்.

நம்ம ஊர் வணிகர்களுக்கு பன்னாட்டு வணிகம் அவசியம், அதோடு வணிகர்களுக்கு தொழில்நுட்பம் அவசியம். அதை டிஜிட் ஆல் வழியே அனைவருக்கும் கொடுத்து வருகின்றோம். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை நாங்கள் சொல்ல வேண்டும். தொழில்நுட்பம் வளர வளர நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவுதான் கற்றுக்கொள்வது என்று யோசித்து ஒரு இடத்தோடு நின்றுவிடக் கூடாது. எனவேதான் டிஜிட்ஆல் தொடர்ந்து தனது பயிற்சி வகுப்புகளை நவீன வரவை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சிகள் கொடுக்கிறோம்.

``கலாம் டிஜிட்ஆல் விலேஜ் பற்றி சொல்லுங்களேன்... அதன் நோக்கம் என்ன?”


``2015ல் டிஜிட்ஆல் அமைப்பை துவக்க முன்னாள் குடியரசுத்தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களை பெரும் முயற்சிக்குப் பிறகு மதுரைக்கு அழைத்து வந்தோம். யெஸ் அமைப்பை துவங்கியபோதும் அப்துல்கலாம் அவர்கள்தான் வந்து துவக்கி வைத்தார். அதனால் டிஜிட்ஆல் அமைப்பு துவக்கவும் அவரையே அழைத்தோம்.

அப்போது அப்துல் கலாம் அவர்களும் இதுபோன்ற அமைப்பை துவக்க வேண்டும் என்றுதான் நானும் நினைத்தேன். அதற்காகவே கலந்துகொள்கிறேன் என்று அவரும் கலந்துகொண்டார். அப்போது அவர் என்னிடம் இதுபோன்ற அமைப்பு நாடு முழுதும் தனது பணிகளை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். அதை நீங்கள் நிச்சயம் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்றும் சொன்னார்.

``தொழில்நுட்பம் வளர வளர அது எல்லாருக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அந்தத்துறை சார்ந்து, வயது சார்ந்து அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டும், அந்த விழிப்புணர்வை நீங்கள் செய்ய வேண்டும்” என்றார். அவர் கனவையே எங்கள் நோக்கமாகக் கொண்டு கிராமங்களில் கலாம் டிஜிட்ஆல் விலேஜ் அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றோம். கலாம் டிஜிட்டால் விலேஜ் பெயர்தான் ஆங்கிலம். ஆனால் எங்கள் பயிற்சி முழுக்க முழுக்க தமிழில்தான் இருக்கும்.

மதுரையில் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள் வருகை எப்படி இருக்கின்றது? மதுரை முதல் கன்னியாகுமரி என்று எடுத்துக்கொண்டால் அங்கேயெல்லாம் இந்நிறுவனங்களின் வருகை சாதகமாக இருக்கின்றதா?


``நிச்சயமாக இருக்கிறது. எனக்கு தெரிந்து மதுரையில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 10 முதல் 20 நிறுவனங்கள் சிறிய பெரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. இணையம் வந்த பிறகு இன்று எங்கிருந்து வேண்டுமானாலும் நிறுவனம் வளர பெரும் வாய்ப்புகள் கிடைக்கின்றது. ஸ்டார்ட்அப் என்ற பெயரிலும், ஸ்டார்ட்அப் என்று தெரியாமலேயே ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

மதுரையைச் சுற்றி 16 மாவட்டங்களுக்கு மையமாக மதுரை விளங்குகின்றது. சென்னை-மதுரை என்று ஒப்பிடக் கூடாது ஏனெனில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் 3ல் ஒரு பகுதி சென்னையில்தான் இருக்கிறது. எனவே சென்னை-மதுரை என்று ஒப்பிடக் கூடாது. ஆனால் மதுரை சார்ந்த பகுதிகள் இன்று தொழில் செய்ய ஏதுவாக இருக்கிறது.

சோஹோ நிறுவனம், இப்போபே நிறுவனத்தின் துவக்குநர் மோகன் ராமநாதபுரத்துக்காரர். அடுத்த பில்லியன் யூசர்ஸ் என்று சொல்வார்கள். அது அதிகப்பட்சம் தொழில்நுட்பம் வழியே சாத்தியம். இதற்கு டிஜிட்ஆல் மூலம், நாங்கள் டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் சார்ந்து பயிற்சிகள் அளிக்கிறோம். ஒரு நிறுவனம் வளரும்போது அதன் செயல்பாடுகளும் ஆட்டொமேஷன் செய்ய வேண்டியிருக்கும். எனவே இதையெல்லாம் நாங்கள் புதிய நிறுவனங்களுக்கு சொல்லித்தர தயாராக இருக்கிறோம்.

இதனால் ஒட்டுமொத்தமாக நிறுவனமும், அவர்களுக்கு தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமும் வளரும். இவர்கள் எல்லாமே வளரும்போது ஒட்டுமொத்த சமூகமே வளரும். இதைத்தான் அரசும் டிஜிட்ஆல் போன்ற அமைப்புகளும் முயலுகின்றன. நம்முடைய வாழ்வியல் முறை, தொழில் முறை இரண்டையும் சேர்த்து நாங்கள் எங்கள் உறுப்பினர்களுக்கு சொல்லித் தருகின்றோம்.

ஆட்களை பணிக்கு அமர்த்துவதில் ஆரம்பித்து, கணக்கு வழக்கு, விற்பனை, வணிகம் கடைசியாக ரிவியூ வரை எல்லாவற்றையும் தொழில்நுட்பம் வழியாகவே செய்வது எப்படி என்பது வரை நாங்கள் பயிற்சி அளிக்கின்றோம். ஒவ்வொரு மாதமும் நாங்கள் பயிற்சிகளை வழங்குகின்றோம்.”

``டிஜிட்ஆல் சங்கமம் நிகழ்வு பற்றி சொல்லுங்களேன். அது என்ன மாதிரியான மாற்றங்களை செயல்படுத்தி வருகின்றது?”


``டிஜிட்ஆல் சங்கமம் நிகழ்வு என்பது எப்படி மதுரையில் அழகர் திருவிழா நடக்கின்றதோ அதே போன்று மதுரையில் நடைபெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் எல்லாரும் கலந்துகொள்ளும் ஒரு தொழில்நுட்ப திருவிழாதான் இந்த சங்கமம். சங்கமத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் அறிஞர்கள் கலந்துகொண்டு துறை சார்ந்து நடக்கும் மேம்பாடுகள், சிக்கல்கள், தீர்வுகளை கூறும்போது இங்கேயுள்ள நிறுவனங்கள் விழிப்புணர்வை பெறுகிறார்கள், அறிவு பரிமாற்றம் நடைபெறுகிறது, அதன் வழியே வணிகமும் நடைபெறுகிறது.

புதிய தொழில்முனைவோர்களுக்கு உந்துதல் கிடைக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், 2018 ஆரம்பித்து 2024 வரை 7 சங்கமம் மாநாடுகளை நடத்தியுள்ளோம். சர்வதே அளவில் பேசுபொருளாக இம்மாநாடு மாறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

``செயற்கை நுண்ணறிவு, படைப்பாளர் நுண்ணறிவாக பரிமாற்றம் பெறும்போது பலருக்கும் நமக்கு வேலை போய்விடுமே என்ற அச்சம் இருக்கிறதே?”


``இல்லை, அப்படி சொல்ல முடியாது. கணினி ஆரம்பிக்கும்போது இதேதான் நடைபெற்றது, பின்னர் கணினி ஆரம்பித்தபின்னர் இணையம் வந்தபோது இதேதான் நடந்தது.  நம்மையும் நமது நிறுவனத்தையும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளாதவர்களுக்குத்தான் சிக்கல். நமது நிறுனத்தில் ஒவ்வொரு துறையிலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி விரைவாக பணிகளை திட்டமிடலாம்.

உங்களுக்கு நிறுவனத்திற்கு உலகத்தகின் சிறந்த மூளையை தருகிறோம். இந்த மூளை உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்துவது என்று முயலலாம். அப்படில்லாம் திட்டமிட்டால் நமது நிறுவனத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இன்னொன்று மனித மூளை அளவுக்கு செயற்கை நுண்ணறிவு நிகழ்நேர தரவைக் கொண்டிருக்காது. எப்படியிருந்தாலும் மனிதனின் அறிவுதான் சிறந்தது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.”

``டிஜிட்ஆலின் எதிர்கால நோக்கம் என்ன?”

``ஆரம்பத்தில் நாங்கள் அறிவு பரிமாற்றத்தையும், கல்வியையும் போதித்துக்கொண்டிருந்தோம். இப்போது டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் எனும் நிலைக்கு மாறியுள்ளோம். எனவே என்ன நவீன தொழில்நுட்பம் வந்தாலும்  முதலில்  நாம் மாறிக்கொள்ள வேண்டும், அப்போதுதான் நமது அமைப்புகளில் உள்ளவர்களை நாம்  சொல்லித்தர முடியும், அவர்களையும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.  எனவே அடுத்தடுத்து மாறக்கூடிய தொழில்நுட்பங்களை எளிதாக கிரகித்துக்கொண்டு மேம்படுத்த நினைக்கின்றோம். எங்கள் அமைப்பில் உள்ள 7000 பேர் மட்டும் எங்கள் இலக்கு அல்ல, தமிழ் பேசும் சமூதாயமே எங்கள் இலக்கு. எங்கள் இலக்கு அப்துல் காலம் அவர்கள் விதைத்த விதை. எனவே  தொழில்நுட்பம் எப்படி மாறினாலும் அதற்கு ஏற்ப எங்களை தகவமைத்துக்கொண்டு எங்களைச் சார்ந்த எல்லாரையும் நவீன நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அவர்களை வணிகத்திலும், வாழ்க்கையிலும் வெற்றி பெற வைப்பதே எங்கள் நோக்கம்.”

தொழில்நுட்பத்திற்காக ஒரு அமைப்பு மதுரை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அமைக்கப்பட்டதும் அதைக்கொண்டு ஒரு சமூகத்திற்கு பலன் பெறுவதும் இது மிகப்பெரிய பணி. இதுபோன்ற பணிகள்தான் ஒரு சமூகத்தை உயிர்ப்புடன் வைக்கின்றன. அந்த வகையில் டிஜிட்ஆல் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு தொழில்நுட்பத்தின் பலனை அனைவருக்கும் கொண்டு சேர்க்கட்டும்.

(தொடரும்..!)

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

'StartUp' சாகசம் 17 : `அம்மா உதவியுடன் தாவர நிறமேற்றிகள்’ - நெல்லை இளைஞரின் `Gusteau Foods’ கதை

'StartUp' சாகசம் 17 :உணவுப் பொருட்களில் வண்ணங்கள் சேர்ப்பது என்பது இன்று ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது. உணவுப் பொருட்களை கவர்ச்சிகரமாக மாற்றுவதிலும், விற்பனையைப் பெருக்குவதிலும் உணவு வண்ணங்கள் முக்கி... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 15 : `20 நிமிடங்களில் ஒரு புத்தகம் கேட்கலாம்..!’ - மேஜிக் 20 தமிழ் செய்வது என்ன?

'StartUp' சாகசம் 15நகரங்களில் போக்குவரத்து நெரிசலும், அலுவலக வேலைப்பளுவும் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், இந்திய வாசகர்கள் புத்தகங்களை படிப்பதற்கு பதிலாக ஒலி வடிவில் கேட்கும் முறைக்கு மாறி வருகி... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 14 : நல்லெண்ணெய் மில் டு கால்நடைத் தீவனம் - `காமதேனு கேட்டில் ஃபீட்ஸ்’ சாதித்த கதை

'StartUp' சாகசம் 14 :தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளில் கால்நடை வளர்ப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் ஜிஎஸ்டிபியில் கால்நடை தீவனத்தில் தமிழ்நாடு 5.69% பங்கையும் பெற்றுள்ளது. தமிழ்ந... மேலும் பார்க்க