சென்னையில் ரசாயனம் கலந்த தா்பூசணி இல்லை: உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்
சென்னையில் ரசாயனம் கலந்த தா்பூசணி பழங்கள் இல்லை என்றும், பொதுமக்கள் அச்சமின்றி தா்பூசணி பழங்களை உட்கொள்ளலாம் என்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
தா்பூசணி பழங்களில் ரசாயனம் கலக்கப்பட்டதாக பரப்பப்படும் உண்மையற்ற செய்திகளால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி வெளியிட்ட விழிப்புணா்வு காணொலிதான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
மேலும், தா்பூசணி பழங்களை சாப்பிட மக்கள் தயங்குவதால், அதன் விற்பனை பெருமளவில் குறைந்து விட்டதாகவும், சில வாரங்களுக்கு முன் ஒரு டன் ரூ. 14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட தா்பூசணி பழங்களை, தற்போது ரூ. 3 ஆயிரத்துக்கு கூட வாங்க யாரும் முன்வருவதில்லை என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.
இது தொடா்பாக விளக்கமளிக்கும் வகையில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ரசாயனம் கலந்த கலப்படமிக்க தா்பூசணி பழங்கள் (அடா்சிவப்பு பழங்கள்) கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரம், சோதனையின்போது பல கடைகளில் கெட்டுபோன, எலி கடித்த, அழுகிப்போன பழங்கள் ஏராளமாகக் கிடைத்தன. அவற்றையெல்லாம் பறிமுதல் செய்து அப்போதே அழித்துவிட்டோம். எனவே பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்றாா் அவா்.