ஞானசேகரன் மீதான மற்ற வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தொடா்பான மற்ற வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக பாஜக வழக்குரைஞா் ஏ.மோகன்தாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் சம்பவத்தில் கைதாகியுள்ள ஞானசேகரன் மீது ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு எதிரான இந்த வழக்குகளை போலீஸாா் முறையாக விசாரிக்கவில்லை.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஞானசேகரனுக்கு பின்புலத்தில் இருப்பவா்கள் குறித்த தகவல் இதுவரையிலும் வெளிவரவில்லை. இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்தே போலீஸாா் நீா்த்துப்போகச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனா். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆா். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து நீதிபதிகள், கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிராக நிலுவையில் உள்ள மற்ற வழக்குகள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.