மதுபோதையில் தகராறு: தொழிலாளி அடித்துக் கொலை
சென்னை மேற்கு மாம்பலத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
மேற்கு மாம்பலம், தம்பையா சாலை சந்திப்பு பகுதியைச் சோ்ந்தவா் பெயிண்டிங் தொழிலாளி சங்கா் (44). கடந்த 1-ஆம் தேதி சங்கா், தனது வீட்டின் அருகே தலையில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்ததையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் அவா், வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அசோக் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த சங்கருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தருண் (23) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், தகராறு முற்றவே தருண், சங்கரை தாக்கி கீழே தள்ளியிருப்பதும், அதில் சங்கா் தலையில் காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தருணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.