Good Bad Ugly: `தீனா' வசனம்; `மங்காத்தா கனெக்ட்'; சிம்ரன் சப்ரைஸ் - டிரெய்லர் ஹைலைட்ஸ்!
`குட் பேட் அக்லி' திரைப்படம் இம்மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அஜித் நடித்திருக்கும் இப்படத்தை அவரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார்.

`கிரீடம்' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி எடிட் செய்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. தற்போது இப்படத்தை டிரைலர் வெளியாகியிருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரனின் `மார்க் ஆண்டனி' படத்தில் `பஞ்சு மிட்டாய் சேலை கட்டி' பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருந்தது அப்போது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அதுபோலவே இப்படத்திலும் ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என முன்பு தகவல் வெளியாகியிருந்தது. அதை இன்று வெளியாகியிருக்கிற இந்த டிரெய்லரில் உறுதிபடுத்தியிருக்கிறார்கள். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான `நாட்டுப்புறப்பாட்டு' படத்தின் `ஒத்த ரூபாய் தாறேன்' பாடலை இப்படத்தில் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அர்ஜுன் தாஸ் நடிக்கிறார் என்ற தகவலை மட்டுமே வெளியிட்டிருந்த படக்குழு முதல் முறையாக அவருடைய லுக்கை டிரெய்லரில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கேங்ஸ்டராக இருக்கும் ஏ.கே தனது மகனுக்காக வன்முறை பக்கம் செல்வதை தவிர்க்கிறார். அதன் பிறகு, தனது மகனுக்காகவே வன்முறை பக்கம் திரும்புவதாகவே கதைச் சுருக்கத்தை டிரெய்லரில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் டிரெண்ட்டான `பத்து கிலோ கறி கொடுங்க பாய்', `இருங்க பாய்' , `கார்டு மேலே உள்ள பதினாரு நம்பரை சொல்லுங்க' போன்ற டிரெண்டிங் வார்த்தைகளையும் ஜென் - சி பார்வையாளர்களுக்காக படத்தில் சேர்த்திருக்கிறார்கள். `மங்காத்தா' திரைப்படத்தில் த்ரிஷாவின் தந்தையாக வரும் ஜெயபிரகாஷை ஒரு காட்சியில் தனது காரிலிருந்து அஜித் தள்ளிவிடுவார். அந்தக் காட்சியை த்ரிஷா மேற்கோள் காட்டிக் கூறுவதாக இந்த டிரெய்லரில் ஒரு வசனத்தை சேர்த்திருக்கிறார்கள்.

`வாலி' `உன்னைக் கொடு என்னை தருவேன்' போன்ற திரைப்படங்களை தொடர்ந்து இப்படத்தில் அஜித்துடன் சிம்ரன் நடித்திருக்கிறார். இந்த தகவலை இந்த டிரெய்லரின் மூலம் சொல்லியிருக்கிறார்கள். இவரை தாண்டி மலையாள சினிமாவிலிருந்து ப்ரியா வாரியர், சைன் டாம் சாக்கோ ஆகியோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். பாலிவுட்டிலிருந்து ஜாக்கி ஷெரஃபையும் இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அஜித் நடித்த `தீனா' படத்தின் ஐகானிக் வசனமான `கை இருக்கும், கால் இருக்கும், மூக்கு இருக்கும், முழி இருக்கும். ஆனால் உயிர் இருக்காது' என்ற வசனத்தை இப்படத்தில் மீண்டும் பேசியிருக்கிறார் அஜித்.