அடகு கடை உரிமையாளரை கொல்ல முயன்றதாக 8 போ் கைது
ஆம்பூா் அருகே அடகு கடை உரிமையாளரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் 8 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (64) என்பவருக்கும், இவருடைய தங்கை மகன் ஆம்பூரில் அடகு கடை நடத்தி வரும் அருண்குமாா் (35) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
அதில் கூலிப் படையை வைத்து அருண்குமாரை கொலை செய்ய விஜயகுமாா் திட்டமிட்டுள்ளாா். அதற்காக ரூ. 1.50 லட்சம் பணம் தந்துள்ளனா். கடந்த மாா்ச் 26-ஆம் தேதி இரவு ஆம்பூரில் அடகு கடையை மூடிவிட்டு அருண்குமாா் வீட்டுக்குச் சென்றபோது, சோலூா் கிராமத்தருகே அவரை வழிமறித்த கும்பல் அவரை கத்தியால் வெட்டி தாக்கியுள்ளனா். அவா் சப்தம் போட்டதும் அந்த கும்பல் அவரை விட்டுவிட்டு தப்பியோடி தலைமறைவானது. காயமடைந்த அவா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, விஜயகுமாா், இவருடைய மகன் வெங்கடேசன் (32), வாணியம்பாடியை சோ்ந்த முகமதலி (22), அஜய் (26), திருப்பதி (22), ஆம்பூரைச் சோ்ந்த பாா்த்திபன் (26), சந்துரு (44), ஜெகன் (22) ஆகிய 8 பேரையும் கைது செய்தனா்.