டிரம்ப்புக்கு சீனா பதிலடி: அமெரிக்க பொருள்கள் மீது 34% கூடுதல் வரி
அந்தகனுக்குப் பின் பிரசாந்த்தின் அதிரடி; மீண்டும் இணையும் கூட்டணி! - பிரசாந்த் பிறந்தநாள் அப்டேட்
டாப் ஸ்டார் பிரசாந்த்திற்கு கடந்த 2024 ராசியான ஆண்டு. ஹீரோவாக 'அந்தகன்', விஜய்யின் நண்பராக 'தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என இரண்டு படங்கள் அவருக்கு வெளியாகின. இரண்டிலுமே பிரசாந்தின் கம்பேக் படங்களாக அமைந்தன. அதிலும் விஜய் படத்தில் அவரது நடனம் பேசப்பட்டது. 'அந்தகன்' படத்தில் நடிப்பில் மிளிர்ந்தார்.

'அந்தகன்' படம் ஆகஸ்ட்டில் வெளியானாலும், இப்போது ஓடிடியில் பார்வையாளர்களை அள்ளி வருகிறது. பாலிவுட்டில் ஹிட்டடித்த `அந்தாதூன்' படத்தை தமிழில் அசத்தலாக ரீமேக் செய்திருந்தார் இயக்குநர் தியாகராஜன்.
காட்சியமைப்புகளில் பெரிதாய் மாற்றம் செய்யாமல், தமிழ்ச் சூழலுக்குத் தகுந்த திரைக்கதை ஆக்கம், அழகான வசனங்களில் கவனிக்க வைத்தார் இயக்குநர் தியாகராஜன். இப்படி சொல்வதற்கு காரணம், 'அந்தாதூன்' படத்தை ஏற்கெனவே பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட கதையென்றாலும் கச்சிதமான நடிகர்களின் தேர்வு தமிழ் ரீமேக்கில் சுவாரஸ்யமாக்கியது.

'அந்தகன்' முடித்த கையோடு பிரசாந்த்தின் அடுத்த படம் குறித்து பலரும் எதிர்பார்த்தனர். இந்தாண்டு ஜனவரி, பொங்கல் என ஒவ்வொரு விசேஷ நாள்களிலும் அவரது அப்டேட் வெளியாகும் என்று பிரசாந்த்தின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். பிரஷாந்தும் அடுத்த படத்திற்கான கதைகள் கேட்டு வந்தார். முன்னணி இயக்குநர்கள் பலரிடமும் அவருக்கான கதைகள் ரெடி செய்து வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், பிரசாந்தின் அடுத்த பட அப்டேட், விரைவில் வெளியாகிறது. இன்னும் ஆச்சரியமாக பெரிய இயக்குநர் ஒருவரின் காம்பினேஷனில் இணைகிறார் என்ற செய்திகள் கோடம்பாக்கத்தில் பரவுகிறது.
வருகிற ஏப்ரல் 6-ம் தேதி பிரசாந்த்தின் பிறந்த நாள் வருகிறது. சென்ற பிறந்த நாளின் போதுதான் அவரது கம்பேக் பட அறிவிப்புகள் வெளியாகின. அதைப் போல இந்த பிறந்தநாளின் போதும், அடுத்த படத்தை அறிவிக்கிறார். இது பிரசாந்த்தின் 55 வது படமாகும். இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

பிரசாந்த் நடித்த 'தமிழ்' படத்தின் மூலம்தான் ஹரி இயக்குநராக அறிமுகம் ஆனார். பிரஷாந்தின் 55 வது படத்தில் சாய்பல்லவி, கயாடு லோஹர், பூஜா ஹெக்டே என பலரது பெயர்கள் பரிசிலீக்கப்பட்டு வருகிறது. 'தமிழ்' படத்தில் சிம்ரன் ஜோடியாக நடித்தது போல, ஹரி - பிரஷாந்த் கூட்டணி படத்திலும் முன்னணி ஹீரோயின் இணையலாம் என்ற பேச்சு இருக்கிறது. இந்தாண்டு இரண்டு படங்கள் கொடுக்கும் ஐடியாவில் இருக்கிறார் பிரசாந்த். அதற்கான அறிவிப்புகளும் அவரது பிறந்தநாளில் வெளியாகலாம் என்கிறார்கள்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
