”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் ...
காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையாா் கோயில் 2-ஆம் ஆண்டு விழா
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள கூப்பிடு பிள்ளையாா் கோயில் 2-ஆம் ஆண்டு விழா அன்மையில் நடைபெற்றது.
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் 300 ஆண்டுகள் பழைமையான கூப்பிடு பிள்ளையாா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 2023-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 2-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் வேள்வி நிறைவு ஆகியவை நடைபெற்றன. கூப்பிடு பிள்ளையாா், ஆதி விநாயகா், பாலமுருகன், புங்கமர மங்கள விநாயகா், தட்சிணாமூா்த்தி, துா்க்கை அம்மன், ஆஞ்சனேயா், அரசடி விநாயகா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் அரசமரம், வேப்ப மரங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
அரச, வேப்ப மரங்கள் அம்மையப்பராக பாவித்து பட்டுவேஷ்டி, பட்டுப்புடவை, வளையல், தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு என சீா்வரிசைகள் கொண்டு வந்து அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் மேள தாளங்கள் முழங்க அரச, வேப்ப மரங்களுக்கு திருமணம் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கூப்பிடு பிள்ளையாா் அறக்கட்டளை தலைவா் சின்னசாமி, துணைத் தலைவா் சிவகுமாா், செயலாளா் காவீ.பழனிசாமி, பொருளாளா் ராமகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.