Dhanush : இட்லி கடை ரிலீஸ் தள்ளிவைப்பு - 'குபேரா' பர்ஸ்ட்; 'இட்லி கடை' நெக்ஸ்ட் - பரபர அப்டேட்
தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கிற `இட்லி கடை' திரைப்படம் இம்மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. ஆனால், படத்தின் 15 சதவிகித படப்பிடிப்பு இன்னும் மீதமுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் எனத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்திருந்தார்.
விகடனுக்கு அளித்த பேட்டியில் ஆகாஷ் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து தற்போது மாற்றம் செய்யப்பட்ட, படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

அக்டோபர் 1-ம் தேதி `இட்லி கடை' திரைப்படம் வெளியாகும் என டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அதே அக்டோபர் மாதம் 2-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் `காந்தாரா' சாப்டர் - 1' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடதக்கது.
இதற்கு முன்பாகவே ஜூன் மாதம் 20-ம் தேதி தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் `குபேரா' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை டோலிவுட் இயக்குநர் சேகர் கமுலா இயக்கியிருக்கிறார்.
`வேங்கை' படத்திற்குப் பிறகு தனுஷ் நடிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதுமட்டுமல்ல, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் கிருத்தி சனூன் நடிக்கும்

`தேரே இஷ்க் மெயின்' திரைப்படமும் இந்தாண்டில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், படக்குழு தனுஷின் இந்த பாலிவுட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எதையும் அறிவிக்கவில்லை.
இந்த லிஸ்டை தாண்டி இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் , `லப்பர் பந்து' தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படம், `போர் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த லைன் அப்களை தனது கைவசம் வைத்திருக்கிறார் தனுஷ்.