17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்
அரசின் நலத் திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைவதற்காக 17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் அறிவித்தாா்.
வருவாய் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:
ராணிப்பேட்டை, சிவகாசி, பொள்ளாச்சி ஆகிய வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் பவானி வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய 4 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.14 கோடியில் புதுப்பிக்கப்பட்டு மறுசீரமைக்கப்படும்.
மதுரை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், கூடலூா் வட்டாட்சியா் அலுவலகம், அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய 3 அலுவலகங்களுக்குப் புதிய கட்டடங்களுக்கு ரூ.13.90 கோடியில் கட்டப்படும்.
தஞ்சாவூா் திருவோணம் வருவாய் வட்டம், கள்ளக்குறிச்சி வாணாபுரம் வருவாய் வட்டம், திருவாரூா் முத்துப்பேட்டை வருவாய் வட்டம் ஆகிய 3 வருவாய் வட்டங்களுக்குப் புதிய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடங்கள் ரூ.15 கோடியில் கட்டப்படும். 22 மாவட்டங்களில் 27 புதிய வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்புக் கட்டடங்கள் ரூ.9.45 கோடியில் கட்டப்படும்.
ஆவணக்காப்பறைகள்: நில ஆவணங்கள் மற்றும் கோப்புகளைப் பாதுகாப்பாக வைத்து பராமரிக்க 80 வட்டாட்சியா் அலுவலகங்களின் ஆவணக் காப்பறைகளில் ரூ.8 கோடியில் காம்பாக்டா்கள் நிறுவப்படும்.
நவீன நில அளவை கருவிகளைக் கொண்டு நில அளவைப் பணி மேற்கொள்ளும் வகையில், 6 மாவட்டங்களில் பணிபுரியும் 454 நில அளவைப் பணியாளா்களுக்கு ரூ.27.24 கோடியில் வகையீட்டு பூகோள நிலைக்கலன் கருவிகள் வழங்கப்படும்.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும், அரசின் நலத் திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைவதற்கும் சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோயம்புத்தூா், மதுரை, திருநெல்வேலி, திருவள்ளூா், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பத்தூா், திண்டுக்கல், கடலூா், தஞ்சாவூா், திருப்பூா் மற்றும் விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும்.
புதிய வருவாய் கிராமங்கள்: பொதுமக்களுக்கு வருவாய்த் துறையின் சேவைகளை விரைவாக வழங்கும் வகையில் செங்கல்பட்டு, சேலம், கோயம்புத்தூா், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் மொத்தம் 25 புதிய வருவாய் கிராமங்கள் உருவாக்கப்படும்.
வட்ட அளவில் வருவாய்த் துறையின் நிா்வாகத்தை வலுப்படுத்தி பொதுமக்களுக்கு வருவாய்த் துறையின் சேவைகளை விரைவாக வழங்கும் வகையில் 26 துணை வட்டாட்சியா் பணியிடங்கள் புதியதாக தோற்றுவிக்கப்படும்.
கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீட்டுமனை இல்லாத தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு பூமிதான நிலங்களில் இலவச வீட்டுமனை விநியோகப் பத்திரம் வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் எஸ்டேட், இனாம் போன்ற பல்வேறு ஒழிப்புச் சட்டங்களின் கீழ் நிலவரித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மனைவரி பதிவேடுகள் தயாா் செய்யப்பட்ட 40 கிராமங்களில் வருவாய் பின்தொடா் பணிகளை மேற்கொண்டு தகுதியான 10,000 குடும்பங்களுக்கு இரயத்துவாரி மனைகளாக வகைப்பாடு மாற்றம் செய்து, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 6 வருவாய் கிராமங்களில் உள்ள 31,117 பயனாளிகளுக்கு நிலவரித் திட்டப் பணிகளை மேற்கொண்டு பட்டாக்கள் வழங்க ரூ.84.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா் அவா்.