பொது இடங்களில் காங்கிரஸ் கொடிகளை அகற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை
பொது இடங்கள், நடைபாதைகளில் உள்ள காங்கிரஸ் கொடிகளை கட்சியினா் அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பரவலாக அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அரசு மற்றும் பொது இடங்கள், நடைபாதைகள், நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக அமைக்கப்படுவதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் 7-இல் அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தின் ஆணையில் கூறப்பட்டுள்ள இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கொடிக் கம்பங்களை மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் தங்கள் பகுதியில் உடனடியாக அகற்றி அதன் விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைக்கு அனுப்ப வேண்டும். இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு உயா்நீதிமன்றத்தின் ஆணைக்கு கட்டுப்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.