மாநிலங்களவை: வக்ஃப் மசோதாவுக்கு எதிராக அதிமுக வாக்களிப்பு! அன்புமணி, ஜி.கே. வாசன்?
மாநிலங்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
மக்களவையில் வியாழக்கிழமை அதிகாலை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று அதிகாலை வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டில் சமூக-மத ரீதியிலான பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு திருத்தங்களுடன் மீண்டும் இரு அவைகளிலும் தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
தமிழக கட்சிகளின் நிலைப்பாடு
மக்களவை பொறுத்தவரை தமிழகத்தின் 39 உறுப்பினர்களும் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அனைவரும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, தமாகா ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் அதிமுகவினரும் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், மசோதாவுக்கு எதிராக அதிமுகவின் தம்பிதுரை, சி.வி. சண்முகம் உள்பட 4 உறுப்பினர்களும் வாக்களித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ஜி.கே. வாசன் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இதனிடையே, மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தார்.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவானது குறிப்பிடத்தக்கது.