புணேவிலுள்ள பாகிஸ்தானியர்கள் 2 நாளுக்குள் வெளியேற உத்தரவு!
மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்திலுள்ள 111 பாகிஸ்தானியர்கள் 2 நாள்களுக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா முறித்து வருகின்றது.
இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டதுடன், அந்நாட்டிலுள்ள இந்தியர்களையும் உடனடியாகத் தாயகம் திரும்ப மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பல்வேறு காரணங்களினால் இந்தியா வந்து புணேவில் தங்கியிருந்த 111 பாகிஸ்தானியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வரும் ஏப்.29-க்குள் வெளியேற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ஜித்தேந்திரா தூதி கூறுகையில், புணேவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களின் தரவுகள் விசா வழங்கும் அதிகாரிகளின் உதவியுடன் பெறப்பட்டு, விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் அவர்கள் வெளியேற வேண்டும் என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கப்பட்ட நிலையில் மருத்துவக் காரணங்களினால் புணே வந்தவர்களுக்கு 2 நாள்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு அவர்கள் ஏப்.29-க்குள் வெளியேற அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்; முதல்வர்களுக்கு அமித் ஷா அழைப்பு!