Indus River: ``சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்...
பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு!
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளில் இருவரின் வீடுகளை குண்டு வைத்து இந்திய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மூன்று பயங்கரவாதிகளின் புகைப்படம் வரையப்பட்டு வெளியிடப்பட்டது. மூவரும் லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர்.
அந்த வரைபடத்தில் இருந்தவர்கள், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அடில் ஹுசைன் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் என்பது அடையாளம் காணப்பட்டது. மேலும் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் அறிவித்தனர்.
இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹாராவில் உள்ள அடில் ஹுசைன் தோகர் மற்றும் புல்வாமா மாவட்டம் டிராலில் உள்ள ஆஷிப் ஷேக்கின் வீடுகளில் நேற்றிரவு இந்திய ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் இருவரின் வீட்டையும் இந்திய ராணுவத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்த்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பந்திபோராவில் நடைபெற்ற தேடுதல் பணியின்போது லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் தளபதிகளில் ஒருவரான அல்தாஃப் லல்லியை ராணுவ வீரர்கள் இன்று காலை சுட்டுக் கொன்றனர்.
மேலும், ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெறும் நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துடன் இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.