'பயங்கரவாதம் வேண்டாம்; அமைதி வேண்டும்!' - ஜம்மு-காஷ்மீர் மாணவிகள் பேரணி!
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து அனந்த்நாக் அரசுக் கல்லூரி மாணவிகள் பேரணி நடத்திய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதுமே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதுமே பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் நேற்று(வியாழக்கிழமை) சம்பவம் நடந்த அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரி மாணவிகள் பேரணி நடத்தினர்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் கையில் பதாகைகளுடன் பேரணியில் ஈடுபட்ட இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,
பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஜம்மு-காஷ்மீரில் அமைதி வேண்டும் என்று மாணவிகள் கையில் பதாகைகளை வைத்திருந்தனர்.
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் அவர்கள் பஹல்காமில் இந்துக்களை மட்டுமே கொன்றதாகவும் சில தவறான தகவல்கள் பரப்பப்படும் நிலையில் இரு மதத்தினரிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாகவும் இந்த மாணவிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.